ஏழை மக்களை மதியாத அரசு சரியும்: கமல் ஆவேசம்! 

ஏழை மக்களை மதியாத அரசு சரியும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
ஏழை மக்களை மதியாத அரசு சரியும்: கமல் ஆவேசம்! 

சென்னை: ஏழை மக்களை மதியாத அரசு சரியும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தது. 

ஆனால் அதேசமயம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் போராட்டம் 49-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆலை மூடப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிக்காக 15 நாள்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஞாயிறன்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தூத்துக்குடிக்கு நேரில் சென்று போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

என் பெயர் கமல்ஹாசன், நான் தமிழர் அதற்காக தான் இங்கு வந்துள்ளேன். நான் அரசியல்வாதியாகவோ, சினிமா நடிகனாகவோ இங்கு வரவில்லை, ஒரு தனிமனிதனாக வந்துள்ளேன். உங்களுடனான என் உறவு வெறும் மொழியால் மட்டும் ஏற்பட்டதல்ல உணர்வாலும் ஏற்பட்டது. இதில் வாக்கு வங்கி செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. குற்றம் கடிதல் அரசின் வேலை, அதை அரசு செய்யவில்லை என்றால் மக்கள் செய்வார்கள். திரைத்துறையில் என்னை நிறைய புகைப்படங்கள் எடுத்துவிட்டனர். எனவே இங்கு புகைப்படத்துக்காகவும் நான் வரவில்லை. என்னிடம் சிலர் கணக்கு கேட்கின்றனர். இங்குள்ள பிரச்னைகளின் புள்ளி விவரங்களைக் கேட்கிறார்கள். நான் படிப்பு அறிவில்லாதவன்தான் ஆனால், இந்த அறிவை வைத்துதான் இத்தனை நாளாக பிழைப்பு நடத்தி வருகிறேன். இங்கு போராடி வரும் மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தற்பொழுது ஏழை மக்களை மதியாத அரசு சரியும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

அன்பு வீசும் அந்த குமாரரெட்டிபுர வேப்பமரத்தடியில் சற்று நேரம் அமர்ந்து பார்த்தால் மக்கள் பற்றிய ஞானம் வரும்.தாய்யுள்ளங்களின் ஓலம் கேட்டேன். ஏழை மக்களை மதியாத அரசு சரியும். மக்களே மய்யம் வாய்மையே வெல்லும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com