சென்னை மெரினா கடற்கரையில் பலத்த பாதுகாப்பு: சர்வீஸ் சாலை பயன்படுத்த தடை

சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
சென்னை மெரினா கடற்கரையில் பலத்த பாதுகாப்பு: சர்வீஸ் சாலை பயன்படுத்த தடை

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் (ஸ்கீம்) எனும் வார்த்தை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி சென்னை மெரினாவில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் செய்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் விடியோ பதிவு சனிக்கிழமை மாலை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

தொடர் விடுமுறை நாட்கள் உள்ள காரணத்தால் மெரினா கடற்கரையில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இதனால் அங்கு விரைந்த காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

இதையடுத்து சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள சர்வீஸ் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து பயன்பாடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், காலை நேரத்தில் நடைபயிற்சி செல்ல எந்த தடையும் இல்லை, ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டத்துக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை பெசன்ட்நகர் கடற்கரை பகுதியிலும் சனிக்கிழமை நள்ளிரவில் போராட்டம் நடத்தியதாக 15-கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com