"வெள்ளை நிற உணவைத் தவிர்ப்பது நல்லது'

வெள்ளை நிற உணவைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது என்று பத்மஸ்ரீ விருது பெற்ற 99 வயது மூதாட்டியும்,  கோவை ஆனந்தம் யோகா மைய நிறுவனருமான நானம்மாள் தெரிவித்தார்.
விழாவில் யோகாசனம் செய்து காண்பித்த நானம்மாள்.
விழாவில் யோகாசனம் செய்து காண்பித்த நானம்மாள்.

வெள்ளை நிற உணவைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது என்று பத்மஸ்ரீ விருது பெற்ற 99 வயது மூதாட்டியும்,  கோவை ஆனந்தம் யோகா மைய நிறுவனருமான நானம்மாள் தெரிவித்தார்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 34 ஆம் ஆண்டு விளையாட்டு விழாவில் அவர் மேலும் பேசியது:

நான் காலையில் எழுந்தவுடன் காலைக் கடனை முடித்து,  பல் துலக்கிவிட்டு யோகா செய்வேன். அதேபோல மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பேன். 

காலையில் கேழ்வரகு, சாமை, கம்பு, திணை, வரகு, குதிரைவாளி போன்றவற்றை வறுத்து கரைத்து சாப்பிடுவேன். மதியம் கீரையுடன் சாப்பாடும்,  இரவில் பாலும்,  பழமும் சாப்பிடுவது வழக்கம். இதுபோல சாப்பிட்டால் உடல் நலமாக இருக்கும். வெள்ளை நிற உணவைத் தவிர்த்தால் உடலுக்கு நல்லது. நல்ல சாப்பாட்டை சாப்பிட வேண்டும். 

நான் சிறு வயதாக இருக்கும்போது எனது தாத்தா, பாட்டி காலையில் தோட்ட வேலையை முடித்துவிட்டு யோகாசனம் செய்வர். அதை குழந்தையாக இருக்கும்போது பார்ப்பேன். எனது எட்டாவது வயது முதல் யோகாசனங்கள் செய்து வருகிறேன். இதுவரை உடல்நிலை பாதிப்பு என மருத்துவமனைக்குச் சென்றதில்லை. ஆசனங்கள் செய்வதால் உடல் நன்றாக உள்ளது என்றார் நானம்மாள்.

இதையடுத்து, மாணவ, மாணவிகளுக்குச் சில ஆசனங்களைச் செய்து காண்பித்து வியப்பில் ஆழ்த்தினார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கினார்.

பல்கலைக்கழக மேலாண்மைத் துறை முதன்மையர் வி. பத்ரிநாத் பேசியது:
99 வயதான நானம்மாள் இந்தியாவின் மூத்த யோகா ஆசிரியர். 2019, மார்ச் 20}ம் தேதி அவர் நூறு வயதை எட்டவுள்ளார். அவர் இதுவரை சுமார் 10 லட்சம் பேருக்கு யோகா கற்றுக் கொடுத்துள்ளார். இவரால் ஏறத்தாழ 600 பேர் யோகா பயிற்றுநர்களாக மாறியுள்ளனர். இவர்களில் நானம்மாளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 36 பேர். எட்டு வயது முதல் 91 ஆண்டுகளாக யோகாசனம் செய்து வருகிறார். குடியரசுத் தலைவரிடமிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் சக்தி விருது (ஸ்திரி சக்தி புரஸ்கார்) பெற்றவர் என்றார் அவர்.

விழாவில் நானம்மாளின் மகன் எள்ளுசாமி,  பல்கலைக்கழக உடற்கல்வித் துறை இயக்குநர் ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com