45 ஆண்டுகளில் அழிந்துபோன 2 கோடி பனை மரங்கள் 

தமிழர்களின் புனித மரமாகக் கருதப்படுவதும், தமிழத்தின் மாநில மரமுமாகிய பனை மரங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. தமிழர்களின் முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்ந்த, திகழ வேண்டிய பனை மரங்களைப் பாதுகாக்க
45 ஆண்டுகளில் அழிந்துபோன 2 கோடி பனை மரங்கள் 

தமிழர்களின் புனித மரமாகக் கருதப்படுவதும், தமிழத்தின் மாநில மரமுமாகிய பனை மரங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. தமிழர்களின் முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்ந்த, திகழ வேண்டிய பனை மரங்களைப் பாதுகாக்க அரசு சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ் மக்களின் பொருளாதாரத்துடன் தொடர்புடைய பனை: 

"தென்னையை வெச்சவன் தின்னுட்டுச் சாவான், பனையை வெச்சவன் பாத்துட்டுச் சாவான்னு' பழமொழி உண்டு, பனை பலன் தர அத்தனை காலம் ஆகுங்கிறதால, அப்படிச் சொன்னாங்க. பனை மரம் மனிதர்களுக்கு மட்டும் பயன் தரக் கூடியதல்ல, எறும்பு, பூச்சிகள், வண்டுகள், ஓணான், மரப்பல்லி, ஆந்தை, வெüவால், அணில், கிளி, குருவி என அனைத்து உயிர்களுக்கும் வாழ்விடமாக இருக்கிறது. 

இம் மரத்தின் வேரிலிருந்து இலை வரை அனைத்துமே பலன் தருபவை. அதனால்தான் இம் மரத்தை பூலோகத்தின் கற்பகத் தரு என்கிறார்கள். ஒரு பனை அழிஞ்சா ஒரு தலைமுறையே அழியுறதுக்குச் சமம். இத்தகைய சிறப்புமிக்க பனைமரங்கள் சில ஆண்டுகளாக மிக வேகமாக அழிக்கப்பட்டு வருவதுதான் வேதனையான விஷயம்.

இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கிய வகைப்பாட்டில் அடங்கும் எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்கள் ஆகியவற்றில் பனைமரம் குறித்த பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. தமிழரின் பெருமிதத்துக்குரிய இலக்கிய, இலக்கண நூல்கள் அனைத்துமே பனை ஓலையில்தான் எழுதப்பட்டு வந்துள்ளன. 

ஆனால், இவற்றையெல்லாம் கடந்து ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு என்பவற்றுள் நெருங்கிய தொடர்புடையதாக அமையும் சிறப்பு சில வகை மரங்களுக்கே உண்டு. இத்தகைய சிறப்புடைய மரமாக தமிழரின் வாழ்வில் இடம்பெற்ற மரம் பனை. பனை மரத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரம் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்துள்ளது. அதனால்தான் சோழர் காலத்தில் ஊரின் எல்லையில் பனையும், தென்னையும் வளர்ப்பதற்கான உரிமையை சோழ மன்னர்கள் வழங்கியுள்ளனர்.

வறட்சியைத் தாங்கி வளரும் பனை: வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களில் பனையும் ஒன்று. நீர் வளம் அதிகமாக உள்ள பகுதியில் வளரும் பனையில் பதநீரும் நுங்கும் கூடுதலாக இருக்கும். ஆனால், சுவை குன்றியிருக்கும். அதேபோல, மண் வகைகளைப் பொருத்தும் பதநீர், நுங்கு, பனங்கிழங்கு ஆகியவற்றின் சுவை மாறுபடும். கார, அமிலத் தன்மையில்லாத செம்மண் நிலங்களில் வளரும் பனை மரத்தின் பதநீர், நுங்கு, கிழங்கு ஆகியவற்றில் சுவை இருக்காது என்று சொல்லப்படுகிறது. 

பொதுவாக, பனை அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடியது. கடற்கரை ஓரத்தில்கூட வளரும் தன்மையுடையது. இந்தியாவில் உள்ள மொத்த பனைமரங்களில் 50 சதவிகித மரங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. பனை அதிகபட்சமாக 100 அடி உயரம் வரை வளரும். இது 120 ஆண்டுகள் வரை வாழும் தன்மையுடையது.

கிராமங்களிலுள்ள குளங்களைச் சுற்றி பனை மரங்களை நட்டு வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். அது குளக்கரையைப் பலப்படுத்துவதற்காக நம் முன்னோர் கையாண்ட முறை. பனைமரத்தின் சல்லிவேர்கள் பரவலாக ஊடுருவிச் சென்று மண்ணை இறுகப் பற்றிக் கொள்வதால், மண் அரிப்பு ஏற்படுவதில்லை. இதனால், கரை பலப்படுகிறது. இப்படி கரைகளில் பனையை விதைக்கும்போது மரத்துக்கு மரம் 10 அடி இடைவெளி இருக்குமாறு விதைத்திருக்கிறார்கள். அதனால்தான் பனைக்குப் பத்தடி என்ற சொலவடை உருவாகியிருக்கிறது.

தொடர்ந்து பல ஆண்டுகள் மழை இல்லாமல்போகும் சூழ்நிலையில் பனை மரங்கள் பட்டுப் போகத் தொடங்கினால், பனை மரமே பட்டுப்போச்சு எனச் சொல்வார்கள். பனை பட்டுப் போய்விட்டால் கடும் வறட்சி, பஞ்சம் நிலவுகிறது என வரையறுத்துக் கொண்டனர் நம் முன்னோர்.

45 ஆண்டுகளில் 3 கோடி பனை மரங்கள் அழிப்பு: 1970-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, தமிழகத்தில் சுமார் 6 கோடி பனை மரங்கள் இருந்துள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பனை மரங்களின் எண்ணிக்கை 5 கோடியாகக் குறைந்திருந்தன. இப்போது இந்த எண்ணிக்கை 4 கோடி அளவுக்கு குறைந்திருப்பதாக கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் தெரிவித்துள்ளது. 

1970ஆம் ஆண்டில் இருந்து 40 ஆண்டுகளில் எவ்வளவு பனை மரங்கள் குறைந்தனவோ, அதே அளவு மரங்கள் கடந்த 3 ஆண்டுகளில் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

1985-86 ஆண்டுகளில் இந்திய அளவில் 6.94 லட்சம் வேலைவாய்ப்புகளையும், தமிழகத்தில் 5.87 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித் தந்த சிறப்பு பனைத் தொழிலையே சாரும். ஒரு பனை மரத்திலிருந்து ஆண்டுக்கு 150 லிட்டர் பதநீர், ஒரு கிலோ தும்பு, ஒன்று புள்ளி ஐந்து கிலோ ஈர்க்கு, 16 நார் முடிச்சுகள், 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் கிடைப்பதாகவும், இதன்மூலம் ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை வருமானம் கிடைப்பதாகவும், கதர் மற்றும் சிற்றூர் தொழில் குழும கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், பனை மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருள்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.200 கோடி அந்நியச் செலாவணி கிடைப்பதாகவும் கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அடி முதல் நுனி வரை பலன் கொடுக்கும் இந்த பனை மரங்கள், தற்போது அழிவின் விளிம்பில் தத்தளித்து வருகின்றன. பனை மரம் ஏறுவதற்கு ஆள்கள் கிடைக்காதது, விளை நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவது உள்ளிட்ட காரணங்களால் பனை மரங்கள் அழிந்து வருகின்றன.

இப்போது இந்தப் பட்டியலில் வறட்சியும் சேர்ந்திருக்கிறது. எவ்வளவு கடுமையான வறட்சியாக இருந்தாலும், அதை பனை மரங்கள் தாங்கும் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், இந்த ஆண்டு வாட்டி வதைக்கும் வறட்சி மற்றும் வெப்பத்தால் காவிரி கரையோரங்களில் காய்த்துக் குலுங்கிய பனை மரங்கள் காய்ந்து, கருகி மொட்டை மரங்களாய் நிற்கின்றன. 

பனை விதைகளை நட்டு பராமரிக்கும் திட்டம் அவசியம்: பனை மரங்கள் இயற்கையாலும், மனிதர்கள் சிலராலும் அழிக்கப்பட்டுவரும் நிலையில், இருக்கும் பனை மரங்கள் அழியாமல் பாதுகாக்கப்படவும், பனை மரங்களைப் புதிதாக வளர்த்தெடுக்கவும் சிறப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்றார் தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ.நல்லசாமி. 

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது: பனை உற்பத்திப் பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதுடன், பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். அப்போதுதான் பனை மரத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்து, அதை பலரும் அதிக எண்ணிக்கையில் வளர்க்கத் தொடங்குவர். 

தமிழகத்தின் மாநில மரமான பனை அழிவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் அவலமானது. எனவே, பனை மரங்களைப் பாதுகாப்பதற்கான சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்திலுள்ள 12,500 ஊராட்சிகளிலும் மக்கள்தொகைக்கு ஏற்ப 2,000 முதல் 5,000 வரை பனை விதைகளை வழங்கி, அவற்றை விதைத்து பாதுகாப்பாக வளர்ப்பதை இயக்கமாக மாற்ற வேண்டும். அத்துடன் பனை மரம் ஏறுவதற்கான இயந்திரங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com