மொழிப் போராளியாகவே வாழ்ந்தவர் நடராஜன்

வாழ்வின் இறுதிவரை மொழிப் போராளியாக வாழ்ந்தவர் ம. நடராஜன் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் புகழாரம் சூட்டிப் பேசினார்.
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜனின் உருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்துகிறார் மதிமுக பொதுச்செயலாளர
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜனின் உருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்துகிறார் மதிமுக பொதுச்செயலாளர

வாழ்வின் இறுதிவரை மொழிப் போராளியாக வாழ்ந்தவர் ம. நடராஜன் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் புகழாரம் சூட்டிப் பேசினார்.
உலகத் தமிழர் பேரமைப்பு இயக்கத்தின் சார்பில், மறைந்த புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜனின் படத்திறப்பு- நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்வுக்கு தலைமை வகித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பேசியது:
முள்ளிவாய்க்கால் முற்றம் உருவாவதற்கும், அதன் வளர்ச்சிக்கும் இடையறாது செயலாற்றியவர் நடராஜன். அவர் இருந்தபோது, முள்ளிவாய்க்கால் முற்றத்தை விரிவுபடுத்தி திறந்தவெளி அரங்கமும், நூலகமும் கட்டத் திட்டமிட்டிருந்தோம். மொழிப்போர் தியாகி ம. நடராசன் பெயரில் அந்த அரங்கமும், நூலகமும் நிச்சயமாக அமைக்கப்படும். 
நடராஜனின் நட்பு, விருந்தோம்பல், பண்பாடு போன்றவற்றை அனைவரும் பாராட்டுவர். மாணவப் பருவம் முதல் இறுதிவரை மொழிப் போராளியாக, ஈழப் போராளியாக, இந்த மண்ணுக்கான போராளியாகவே வாழ்ந்தார்.
உலகம் முழுவதும் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு பெரும் உதவியாக இருந்தவர். குறிப்பாக, ஈழத் தமிழர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில துணையாக இருந்தவர் அவர். தற்போது தோன்றாத் துணையாக மாறிப் போனார்.
வெவ்வேறு கொள்கைகள், கட்சிகளில் உள்ள பல்வேறு நபர்களுடன் நடராஜன் நெருக்கமான நட்பு பாராட்டினார். அவர் மறைந்தபோதும், நடராஜன் என்ற மையப்புள்ளியில் இணைந்து நிற்கிறோம் என்றால் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அவரது கனவை நனவாக்க நாம் பாடுபடுவோம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் ம. நடராஜனின் உருவப்படத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திறந்துவைத்து பேசியது: நினைத்து பார்க்க முடியாத, வெளியுலகிற்கு தெரியாத பல சாதனைகளை செய்தவர் நடராஜன். அவர் எந்த அதிகாரப் பொறுப்பிற்கும் வரவில்லை. எம்ஜிஆர் உயிரோடு இருந்திருந்தாலும், நடராஜன் அதிகாரத்திற்கு வந்திருந்தாலும் தமிழீழம் மலர்ந்திருக்கும். ஆனால், அவர் அதிகாரப் பொறுப்பிற்கு வரவில்லை. கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் நான் கூட்டணி வைக்க நடராஜனே காரணம். ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும், நடராஜனின் பெயர் எப்போதும் நினைவுகூரப்படும் என்றார். 
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன், கவிஞர் காசி ஆனந்தன், முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகி உஞ்சை அரசன், ஐயனாபுரம் முருகேசன், வழக்குரைஞர் அ. நல்லதுரை உள்ளிட்ட பலர் பேசினர். விழாவில் பழ. நெடுமாறன் எழுதிய நட்பிற் சிறந்த நண்பர் நடராசன் என்ற நூல் வெளியிடப்பட்டது. 
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி. தினகரன், மறைந்த ம. நடராஜனின் சகோதரர்கள் விளார் ம. சாமிநாதன், ம. ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, முள்ளிவாய்க்கால் முற்ற நிர்வாகி ஜோ. ஜான்கென்னடி வரவேற்றார். நிறைவில் பேராசிரியர் வி. பாரி நன்றி கூறினார். 

காவிரி போராட்டத்தை தமிழக அரசு முடக்க நினைக்கிறது: வைகோ

தஞ்சாவூர் அருகேயுள்ள முள்ளிவாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ம. நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வைகோ செய்தியாளர்களிடம் கூறியது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒரு நாளும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது. அமைக்கப் போவதும் இல்லை. தமிழக மக்களை தமிழக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. 
காவிரிக்காக மாணவர் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை தமிழக அரசு அடக்குமுறையைப் பிரயோகித்து முடக்க நினைக்கிறது. 
ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் திட்டங்களையும், நீட் தேர்வையும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் வஞ்சிக்கும் மத்திய அரசை எதிர்த்தும் நடக்கும் போராட்டங்களை முடக்க நினைக்காதீர்கள். தமிழகம் கொதிநிலையில் இருக்கிறது. தமிழகத்தை பஞ்ச பிரதேசமாக, பாலைவனமாக மாற்றிவிட்டு, இங்குள்ள நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று, எத்தியோப்பியா, நைஜிரீயாவாக தமிழகத்தை மாற்ற மத்திய அரசு முனைந்துள்ளது. இதுபோன்ற துரோகச் செயலில் ஈடுபடும் மோசமான மத்திய அரசைக் கண்டித்து மக்கள் அனைவரும் கிளர்ந்தெழ வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை எந்த ஊரிலும் உள்ளே விடக்கூடாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com