அருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரம்: பல்கலை விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு

அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி உதவிப் பேராசிரியை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரம்: பல்கலை விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு

அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி உதவிப் பேராசிரியை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

பேராசிரியை மீதான புகாரை விசாரிக்க 5 பேர் கொண்ட பல்கலைக்கழக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழுவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கைக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பேராசிரியை நிர்மலா விவகாரத்தில், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களாலேயே விசாரணை நடத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. பேராசிரியைக்குப் பின்னால் இருந்து அவரை இயக்கியது யார் யார், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பதை எல்லாம் மூடி மறைக்கும் நாடகம் இது. பேராசிரியை விவகாரத்தை மூடி மறைத்து விடலாம் என்று நினைத்தால் அது முடியாது.  எனவே, இது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக பேராசிரியை மீதான புகார் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி. செல்லத்துரை திங்கள்கிழமை கூறினார்.

புதுதில்லியில் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் கருத்தரங்கிற்குச் சென்றுள்ள துணைவேந்தர் பி.பி. செல்லத்துரையிடம் செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறியது:

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி தன்னாட்சி அதிகாரமுடையது. அதற்கும் பல்கலைக்கழகத்துக்கும் சம்பந்தமில்லை. ஆனால், அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியையின் நடவடிக்கைகள் சரியல்ல. அவர் உண்மைக்கு மாறான தகவல்களை கூறியுள்ளார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் அறிவியல் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் அவர் யாரைக் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை. 

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை மீது விசாரணை நடத்திட பல்கலைக்கழகத்தின் சார்பில் கணிதத்துறை பேராசிரியர், ஆட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்த குழுவில் கணிதத்துறை பேராசிரியர் லில்லிஸ் திவாகர், ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஆண்டியப்பன், பேராசிரியைகள் ஜெயபாரதி, வரலட்சுமி, ராஜதபலா ஆகியோர் இடம் பெற்றிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவத்தின் பின்னணி: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி உள்ளது. இங்கு, கணிதத் துறை உதவிப் பேராசிரியையாக ஆத்திபட்டியைச் சேர்ந்த நிர்மலாதேவி (46) பணிபுரிந்து வருகிறார். இவர், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகள், கருத்தரங்குகள் முதலியவற்றுக்கு மாணவ, மாணவிகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது வழக்கமாம். 

இந்நிலையில், நிர்மலாதேவி, கடந்த மாதம் அவரது துறையில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலரை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு, பல்கலைக்கழக அதிகாரிகள் எதிர்பார்ப்பதை நிறைவேற்றினால் மதிப்பெண், பணம், அரசு வேலை எளிதில் கிடைக்கும் என தவறான நோக்கில் பேசினாராம்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாணவிகள் கடந்த மார்ச் 19-ல் கல்லூரி நிர்வாகத்திடம் உதவிப் பேராசிரியை மீது புகார் தெரிவித்தனர். இதையடுத்து பேராசிரியை நிர்மலாதேவியிடம் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி மார்ச் 21-ல் அவரை பணியிடை நீக்கம் செய்தது. 

இந்நிலையில், உதவி பேராசிரியை மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரசாந்த், இந்திய மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினரும், மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞருமான நிர்மலாராணி மற்றும் மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 

மாணவிகளிடம் தவறான நோக்கில் பேசிய உதவிப் பேராசிரியை குறித்து கல்லூரியில் திங்கள்கிழமை கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளர் மதி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா மற்றும் வட்டாட்சியர் சிவகார்த்திகாயினி ஆகியோர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஆத்திபட்டியில் உள்ள நிர்மலாதேவி வீட்டிற்கு விசாரிக்க சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது செல்லிடப்பேசி மூலம் அவர், வீட்டின் உள்ளே இருந்து கொண்டு வெளிக்கதவு மற்றும் வீட்டின் உள்புறமாக பூட்டியிருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீஸார், அவரது உறவினர்கள் மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை நிர்மலாதேவிக்கு தெரியப்படுத்தினர். பின்னர் வேறு வழியின்றி உதவிப் பேராசிரியை கதவை திறந்து வெளியில் வந்தபோது, அவரை போலீஸார் கைது செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com