எஸ்.சி., எஸ்.டி., சட்டம்: தீர்ப்பு குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் சில பிரிவுகளை நீக்கி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
எஸ்.சி., எஸ்.டி., சட்டம்: தீர்ப்பு குறித்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு


சென்னை:  எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் சில பிரிவுகளை நீக்கி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவர்களின் நலனைக் கருதி, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 20ஆம் தேதி தீர்ப்பு ஒன்றை அளித்தது. 

அதில், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் மேலதிகாரிகள் மீது கொடுக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யவோ அல்லது கைது நடவடிக்கையை எடுக்கவோ கூடாது என்று தடை விதித்தது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று தலித் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்தன.

இதைக் கண்டித்து, நாடு முழுவதும் தலித் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டங்களின்போது, வடமாநிலங்களில் பெரும் வன்முறை மூண்டது குறிப்பிடத்தக்கது. இதில் 11 பேர் பலியாகினர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் குரல் கொடுத்தன.

இந்த நிலையில், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், உடனடி கைது, கைது செய்யப்படுவோருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்ற பிரிவுகளை உச்ச நீதிமன்றம் நீக்கிவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. 

ஏற்கனவே இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி கேரள அரசு மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com