எதற்காக ரஜினியை வைத்து படம் எடுத்தார் பாரதிராஜா?: ஆனந்தராஜ் ஆவேசம்! 

ரஜினி கர்நாடக தூதுவன் என்றால் எதற்காக ரஜினியை வைத்து படம் எடுத்தார் பாரதிராஜா என்று நடிகர் ஆனந்தராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதற்காக ரஜினியை வைத்து படம் எடுத்தார் பாரதிராஜா?: ஆனந்தராஜ் ஆவேசம்! 

சென்னை: ரஜினி கர்நாடக தூதுவன் என்றால் எதற்காக ரஜினியை வைத்து படம் எடுத்தார் பாரதிராஜா என்று நடிகர் ஆனந்தராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக, சில நாட்களுக்கு முன்னால் சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடந்தது. அப்பொழுது நாம் தமிழர் கட்சியினைச் சேர்ந்த ஒருவர் காவலர்களைத் தாக்கிய காட்சிகள் வெளியாகின.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை தெரிவித்திருந்தார். அதற்கு அவரைக் கண்டிக்கும் விதமாக இயக்குநர் பாரதிராஜா காட்டமான ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவரை கர்நாடக காவித் தூதுவன் என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் ரஜினி கர்நாடக தூதுவன் என்றால் எதற்காக ரஜினியை வைத்து படம் எடுத்தார் பாரதிராஜா என்று நடிகர் ஆனந்தராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

வியாழன் காலை சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை நடிகர் ஆனந்தராஜ் சந்தித்தார். அவருடன் சுமார் அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனைக்கு பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராக ரஜினி உள்ளார். தமிழகத்தில் இருந்து ரஜினியை பிரித்து பார்ப்பது தவறானது.

ரஜினிகாந்த்தை சிலர் கார்னர் செய்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. எதை நோக்கி ரஜினியை குறி வைக்கிறார்கள் என்பது சில நாட்களில் உங்களுக்கே தெரிய வரும்.

கர்நாடகவில் தற்போது இருந்துவரும் அரசியல் சூழலில் காவிரி வாரியம் அமைக்கப்படாது என்றே கருதுகிறேன். இயக்குநர் பாரதிராஜா தற்பொழுது ரஜினியை கர்நாடகத் தூதுவன் என கருத்து சொல்கிறார்; அப்படி என்றால் எதற்காக ரஜினியை வைத்து படம் எடுத்தார்.?

அத்துடன் ரஜினிகாந்த் நடித்த படத்துக்கு கொடி பறக்குது என பாரதிராஜா தலைப்பு வைத்தது ஏன்? கொடி பறக்குது என்பதற்கு பதிலாக 'பரதேசி' என பாரதிராஜா பெயர் வைத்திருக்கலாமே?

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com