காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க முதல்வரையும் அழைத்துச்செல்ல தயார்: மு.க.ஸ்டாலின்

காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நேரம் கிடைத்தால், முதல்வரையும் அழைத்துச்செல்ல தயாராக இருப்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க முதல்வரையும் அழைத்துச்செல்ல தயார்: மு.க.ஸ்டாலின்

காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நேரம் கிடைத்தால், முதல்வரையும் அழைத்துச்செல்ல தயாராக இருப்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்றார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்,
நாடும் – வீடும் நன்றாக இருந்தால் தான் நாம் அனைவரும் நன்றாக வாழ முடியும். இன்றைக்கு நாடு நன்றாக உள்ளதா என்று எழுந்துள்ள கேள்விக்குறியை மாற்றிட வேண்டுமென்றால், நாமெல்லாம் ஒன்று சேர்ந்து தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொடிய ஆட்சிக்கும், மத்தியில் நடக்கும் மதவாத ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க உறுதியேற்க வேண்டும். காவிரிப் பிரச்னை இன்றோ, நேற்றோ உருவானதல்ல. ஏறக்குறைய 30 ஆண்டுகளாக தொடர்கிறது. தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி, காவிரி உரிமைக்காக எத்தனை முறை தில்லிக்கும், அண்டை மாநிலங்களுக்கும் சென்று வாதிட்டு, குரல் கொடுத்து, எப்படியெல்லாம் போராடி, பலமுறை அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்டி விவாதித்து, விவசாயப் பெருங்குடி மக்களை கலந்தாலோசித்து செயல்பட்டு இருக்கிறார் என்பதையெல்லாம் ஒரு மிகப்பெரிய பட்டியலாக இங்கு சொல்ல முடியும்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, காவிரி நடுவர் மன்றத்தை அமைக்கும் முயற்சியில் தலைவர் கருணாநிதி வெற்றி கண்டார். அதனைத்தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் ஆட்சியிலும், பாஜகவின் முதுபெரும் தலைவர் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், அரசிதழில் வெளியிடவும், நடுவர்மன்றத்தின் தீர்ப்பை பெறவும் தலைவர் கருணாநிதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால், இன்று தமிழ்நாட்டில் நடக்கும் ‘குதிரை பேர’ அரசு மக்களுடைய ஆதரவுபெற்ற அரசல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த ஆட்சி தொடர்கிறது. எந்த நேரத்திலும் இது கவிழும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சியை, மத்தியில் இருக்கின்ற பாஜக அரசு காப்பாற்றிக் கொண்டு வருகிறது. காரணம், அவர்களின் அடிமையாக இந்த ஆட்சி இருப்பதால் காப்பாற்றுகிறார்கள். இன்று திமுக ஆட்சி இருந்திருந்தால், நாம் அடிமையாக இருந்திருப்போமா? நமது உரிமைகளை விட்டுக் கொடுத்திருப்போமா? மாநில சுயாட்சிக்கு பங்கம் வரும் நிலையை அனுமதித்து இருப்போமா? தமிழகத்தில் இப்போதுள்ள கவர்னரின் நிலை என்ன? தமிழ்நாடே வெட்கி தலைகுனியும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சியும் சரியில்லை. மத்திய அரசின் பிரதிநிதியாக இந்த ஆட்சியை கண்காணிக்கின்ற ஆளுநரின் நிலை என்ன என்பதையும் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்தில் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தெளிவான, உறுதியான, இறுதியான ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் தெரிவித்தது. நியாயமாக, மத்திய அரசு உடனடியாக பாராளுமன்றத்தில் அந்தத் தீர்ப்பை முன்வைத்து, சட்டமாக்கித் தந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதை செய்யவில்லை. பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் எடுபிடியாக இருக்கும் எடப்பாடி தலைமையிலான குதிரை பேர அரசும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதும், முதல்வர் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், காரணம் கர்நாடக அரசு அந்தத் தீர்ப்பை ஏற்க முன்வரவில்லை, எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும், என்று நான் வலியுறுத்தினேன். அதை அவர்கள் செய்ய முன்வராத காரணத்தால், எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நாம் அனைத்து கட்சி கூட்டம் கூட்டவும், அதில் ஒத்த கருத்துடைய தோழமைக் கட்சிகளை மட்டுமல்லாமல், பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் அழைக்க முடிவு செய்தோம்.

நமது கூட்டம் நடைபெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்பாக அரசு கூட்டம் நடத்தியது. உடனே, நம்முடைய கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, காவிரி விவகாரத்தில் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக, அவர்கள் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றோம். அதில், அனைத்து கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை எல்லாம் முதல்வர் தலைமையில் தில்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமரை சந்தித்து அழுத்தம் தருவது என்று தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், இதுவரையும் பதில் வரவில்லை. இந்த நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வரிடம் இருந்து எந்தவொரு கடிதமும் வரவில்லை, என்று தெரிவித்துள்ளார். அதற்கு முதல்வர் இதுவரையிலும் மறுப்போ, விளக்கமோ தெரிவிக்கவில்லை.

அதன்பிறகு, நாம் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மறியல்கள், முழு அடைப்புப் போராட்டம் ஆகியவற்றை நடத்தினோம். அதுமட்டுமல்ல, காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புப் பயணம் நடத்தினோம். வரும் 23 ஆம் தேதியன்று எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தவிருக்கிறோம். பிரதமரை சந்திக்க நேரம் பெறமுடியாத மானங்கெட்ட, அடிமையாக ஒரு முதல்வர் இங்கு இருக்கிறார். எனவே, இங்கிருக்கும் தலைவர்களை எல்லாம் நாம் டெல்லிக்கு அழைத்துச் செல்வோம் என்று முடிவெடுத்து, ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அதனை தில்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். ஒருவேளை அவர்கள் நேரம் அளித்தால், முதல்வரையும் சேர்ந்து அனைவரையும் தில்லிக்கு அழைத்துச்செல்ல நான் தயாராக இருக்கிறேன். அதேநேரத்தில், அவர்கள் நேரம் தரவில்லை என்றால் நமது போராட்டம் தொடரும்.

ஆகவே, அடிமையாக இங்கு இருக்கின்ற ஆட்சிக்கும், அதை ஆட்டிப் படைக்கும் கொடிய மத்திய ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க, எதிர்வரும் தேர்தலை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com