உட்பிரிவு நில பத்திரப் பதிவு: அரசுக் குழு இன்று கர்நாடகம் பயணம்

உட்பிரிவுகளில் உள்ள நிலங்களை பத்திரப் பதிவு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய புதிய நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள, தமிழகக் குழு வியாழக்கிழமை கர்நாடகம் செல்லவுள்ளது.

உட்பிரிவுகளில் உள்ள நிலங்களை பத்திரப் பதிவு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய புதிய நடைமுறைகள் குறித்து அறிந்து கொள்ள, தமிழகக் குழு வியாழக்கிழமை கர்நாடகம் செல்லவுள்ளது.
 இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு விவரம்:-
 உட்பிரிவு உள்ள நிலங்கள் பட்டா மாற்றம் செய்யப்படுகின்றன. உட்பிரிவு உள்ள நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு, அதன்பின் நிலத்தை உட்பிரிவு செய்ய மனு பெறப்படுகிறது. இந்த மனுவின் அடிப்படையில் உட்பிரிவு செய்யப்பட்டு உத்தரவு வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையில் நிலத்தை நேரில் ஆய்வு செய்யாமல் பத்திரப் பதிவு செய்யப்படுகிறது. பத்திரப் பதிவுக்குப் பிறகு நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளும்போது, பத்திர ஆவணங்களின்படி நிலம் இல்லாத சூழல் ஏற்படுகிறது. இதனால் நிலத்தினை உட்பிரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
 உட்பிரிவு உள்ள நிலத்தை பத்திரப் பதிவு செய்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அதற்கான மனுவைச் செய்து, அதன் அடிப்படையில் நிலத்தை ஆய்வு மேற்கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட தோராய வரைபடத்தைப் பெற்று அதன் அடிப்படையில் பத்திரப் பதிவு செய்தால் இப்போதுள்ள நடைமுறைச் சிக்கல்கள் தீரும். இதுபோன்ற நடைமுறைகள் கர்நாடக மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றன. எனவே, திருவண்ணாமலை மாவட்ட நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் ஜி.ரூப்சிங் தலைமையிலான தமிழகக் குழு வியாழக்கிழமை, கர்நாடகம் சென்று அங்குள்ள விவரங்களை அறிந்து வரும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com