குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

குட்கா விவகாரத்தில் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்று தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தடையை மீறி குட்கா, போதைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் லஞ்சம் தருவதாக குற்றச்சாட்டு எழுந்து தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தமிழகம் முழுவதும் குட்கா பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படுவதாக திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து வந்த நிலையில், குட்கா உற்பத்தி,  விற்பனை, சந்தையில் கிடைப்பது என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி: தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப்பாக்குக்கு தடை விதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன போதிலும், அதன் சட்டவிரோத விற்பனை மட்டும் இன்னும் குறையவில்லை.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள குட்காவை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கும்  சென்னையில் செயல்பட்டு வந்த குட்கா நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ரூ. 39 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்திருப்பதற்கான ஆதாரங்கள் வருமானவரித்துறை ஆய்வுகளின் போது கைப்பற்றப்பட்டன. 

இந்நிலையில் குட்கா ஊழல் புகாரில் தமிழக அமைச்சர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதால், இது தொடர்பாக காவல்துறை விசாரிக்காமல்,  சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வர முடியும் என்று கோரி திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com