கோவையில் ஜல்லிக்கட்டு வன்முறை: விசாரணை ஆணையத்தில் காவல் அதிகாரிகள் விளக்கம்

கோவையில் ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தலைமையிலான விசாரணை ஆணையம் முன் மாநகர காவல் துறை துணை ஆணையர் எஸ்.லட்சுமி உள்ளிட்ட

கோவையில் ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தலைமையிலான விசாரணை ஆணையம் முன் மாநகர காவல் துறை துணை ஆணையர் எஸ்.லட்சுமி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
 ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தலைமையிலான 5-ஆம் கட்ட விசாரணை கோவை அரசு விருந்தினர் மாளிகையில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
 இதுகுறித்து நீதிபதி ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 கோவையில் நடைபெறும் 5-ஆம் கட்ட விசாரணையே இறுதியானது. கோவை மாநகர் காவல் துறை துணை ஆணையர் லட்சுமி உள்பட 6 காவல் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறுகிறது. இதுவரையில் கோவையில் நடத்திய விசாரணையில் காவல் துறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் சிலர் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதே வேளையில், அழைப்பாணை (சம்மன்) அனுப்பி விசாரணைக்கு வராதவர்களை நாங்கள் வற்புறுத்துவது இல்லை. விசாரணைக்குத் தேவைப்படுபவர்கள் வராவிட்டால் மீண்டும் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
 அடுத்ததாக மதுரை, சென்னையில் விசாரணை தொடரும். மதுரையில் ஏற்கெனவே 800- க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் அலங்காநல்லூரில் போராடியவர்களில் பெரும்பாலானோர் போலீஸாருக்கு ஆதரவாகத்தான் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்றார்.
 கோவை அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையம் முன்பாக துணை ஆணையர் எஸ்.லட்சுமி, காவல் ஆய்வாளர்கள் வி.செல்வராஜ், டி.எச்.கணேஷ், உதவி ஆய்வாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர் ஆஜராகினர். இவர்கள், வ.உ.சி. மைதானத்தில் நடத்தப்பட்ட தடியடி தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com