குரூப் -1 தேர்வில் முறைகேடு: மேலும் ஒருவர் கைது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் -1 தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் -1 தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில், மேலும் ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 டிஎன்பிஎஸ்சி சார்பில் பதிவாளர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளில் 74 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு கடந்த 2016 ஜூன் 29, 30, 31 தேதிகளில் நடைபெற்றது.
 இத்தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதனிடம், தேர்வாணையத்தின் துணைச் செயலாளர் சங்கரசுப்பு புகார் அளித்தார். இப்புகார் குறித்து விசாரணை நடத்த மத்தியக் குற்றப்பிரிவுக்கு ஆணையர் விசுவநாதன் உத்தரவிட்டார்.
 அதன் அடிப்படையில், மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த தேர்வாணையத்தின் ஒழுங்கு நடவடிக்கைத் துறையில் அலுவலராக இருந்த சிவசங்கர் என்பவர், தேர்வு எழுதிய ஒருவரின் விடைத்தாள்களை மாற்றுவதற்காக பணம் பெற்றிருப்பது தெரிய வந்தது. வேறு சில ஊழியர்களும், இவ்வாறு விடைத்தாள்களை மாற்றுவதற்கு சில தேர்வர்களிடம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வசூலித்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிவசங்கர் உட்பட 4 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து மேலும் சிலர் கைதாயினர்.
 இந்நிலையில், சென்னை நந்தனம் மேற்கு சிஐடி நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் சோதனை செய்தனர்.
 போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், தேர்வாணைய பிரிவு அலுவலராக பணிப்புரியும் அண்ணா நகரைச் சேர்ந்த காசிராம்குமார் (45) என்பவருக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
 இதைத்தொடர்ந்து போலீஸார் காசிராம்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனர். இவ்வழக்கில் மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com