சுகாதாரத் துறையில் 1,008 ஊழியர்கள் நியமனம்: ஆணைகளை வழங்கினார் முதல்வர்

தமிழக சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 1,008 ஊழியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
சுகாதாரத் துறையில் 1,008 ஊழியர்கள் நியமனம்: ஆணைகளை வழங்கினார் முதல்வர்

தமிழக சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 1,008 ஊழியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
 தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 242 மருத்துவர்கள், 337 செவிலியர்கள், 308 மருந்தாளுநர்கள், 90 கதிர்வீச்சு நிபுணர்கள், 21 சுகாதார புள்ளியியல் வல்லுநர்கள், 10 இளநிலை உதவியாளர்கள் ஆகிய 1008 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 20 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைகளை வழங்கிப் பேசியது:
 உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், மிகச் சிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை உருவாக்குவதிலும், இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக சிறந்து விளங்கி வருகிறது. தாய் சேய் நலம் மற்றும் குடும்ப நல சேவைத் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரியாகத் திகழ்வதோடு, நோய்த் தடுப்புக்காக பல முன்னோடித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
 அரசு மருத்துவமனைகளில் உள்ள பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பி, ஏழை, எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக சுகாதாரத் துறைக்கென மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 2012-இல் தொடங்கப்பட்டது. இந்த வாரியத்தின் மூலம் இதுவரை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்பட 23,880 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
 துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது: சுகாதாரத் துறைக்கு 2010-11-ஆம் ஆண்டில் ரூ.3,888 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த நிதியாண்டில் ரூ.11,638.44 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 2011-ஆம் ஆண்டை விட மூன்று மடங்கு அதிகமாகும். எம்.பி.பி.எஸ். இடங்கள் 1940-இலிருந்து 2900-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பில் 575 இடங்கள் கூடுதலாகப் பெறப்பட்டுள்ளது என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
 தானமாகப் பெறப்பட்ட கைகள் மூலம் மறுவாழ்வு: இரண்டு கைகளையும் இழந்த இளைஞருக்கு உயிரிழந்தோரிடம் இருந்து தானம் பெறப்பட்ட கைகள் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அண்மையில் பொருத்தப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு மருத்துவமனையில் இதுபோன்ற அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் குழுவுக்கு நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com