பேச்சு வார்த்தையில் உடன்பாடு: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

ஊதிய முரண்பாட்டைக் களைந்திடக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை (ஏப்.26) மாலையுடன் முடிவுக்கு வந்தது.

ஊதிய முரண்பாட்டைக் களைந்திடக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை (ஏப்.26) மாலையுடன் முடிவுக்கு வந்தது.
 தமிழகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பணிக்கு வந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதற்கு முன் பணியில் இணைந்தவர்களுக்கும் இடையே ஊதியத்தில் அதிக வித்தியாசம் உள்ளது. ஆறாவது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இந்த ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை (ஏப்.23) போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.
 இதைத் தொடர்ந்து மைதானத்தில் தாங்கள் பயிற்சி செய்ய வேண்டும் என போலீஸார் கேட்டுக் கொண்டதால் சிறிது தொலைவில் உள்ள நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு போராட்டக்களம் செவ்வாய்க்கிழமை இடம் மாற்றப்பட்டது. இதற்கிடையே அமைச்சருடன் இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் முதல் கட்டமாக செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
 உடல் சோர்வு காரணமாகவும் மூன்று நாள்கள் சாப்பிடாததாலும் புதன்கிழமை வரை 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. மயக்கமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்ற ஆசிரியர்கள் மீண்டும் போராட்டக் களத்துக்குத் திரும்பினர்.
 மீண்டும் பேச்சுவார்த்தை: சென்னை கிண்டியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்தனர்.
 அமைச்சர் செங்கோட்டையன் உறுதி: அமைச்சர் முன்னிலையில் பழச்சாறு அருந்தி, தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "ஒரு நபர் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்' என்றார்.
 ஒரு நபர் குழுவிடம் பேச... இடைநிலை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சுமார் 45 நிமிஷங்கள் சந்தித்துப் பேசினர்.
 ஊதிய முரண்பாடுகள் குறித்து தமிழக நிதித் துறை செயலாளர் (செலவினம்) சித்திக் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் குழுவிடம் கோரிக்கைகளை வலியுறுத்த செயலாளர் பிரதீப் யாதவ் கேட்டுக் கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com