ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
 ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மதிமுக பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, வாதிட்ட அரசு வழக்குரைஞர் இத் தகவலைத் தெரிவித்தார். வைகோ தாக்கல் செய்த மனு விவரம்:
 தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து வெளியான கழிவுகளால் காற்று, நீர் கடுமையாக மாசு அடைந்துள்ளன. இப்பகுதியில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள், மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் தனது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலை மூலமாக ஆண்டுக்கு 8 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
 இதன்மூலம் வெளியேறும் கழிவுகளை அகற்றுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை முறையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. இந்த விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து உரிய அனுமதி பெறவில்லை. ஸ்டெர்லைட் ஆலையின் முதலாவது யூனிட் இயங்குவதற்காக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் 1994-ம் ஆண்டு தடையில்லா சான்று பெறப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் தடையின்மைச் சான்று காலாவதியாகிவிட்டது.
 தற்போது தொழிற்சாலையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் விவசாயிகள், மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே தற்போது உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்குவதற்கும், புதிய தொழிற்சாலை விரிவாக்கத்துக்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் சி.டி. செல்வம், ஏ.எம். பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் செல்லப்பாண்டியன் வாதிடுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதி 2018 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. அதன் பிறகு அனுமதியை நீட்டிக்கவில்லை. ஆலையின் விரிவாக்கத்துக்கும் அனுமதி அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
 வைகோ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அஜ்மல்கான் வாதிடுகையில், ஸ்டெர்லைட் ஆலையை நடத்த ஏற்கெனவே, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தாலும், அந்த உத்தரவில் இந்த தீர்ப்பு ஆலையை நிரந்தரமாக இயக்கும் தீர்ப்பு அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இருந்தால் எந்த கட்டத்திலும் ஆலையை மூட ஆணை பிறப்பிக்கலாம் என்றும் கூறியிருக்கிறது.
 தற்போது அந்த ஆலைக்கு எதிராகப் பொதுமக்கள் அறப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதி மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது, அதன் பிறகு அனுமதி வழங்கவில்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. அப்படியெனில் ஆலையை மூட வாரியம் ஏன் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
 விரிவாக்கத் திட்டத்துக்கும் இதுவரை அனுமதி தராவிட்டாலும், வரும் நாள்களில் அனுமதியை அளிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும், விரிவாக்கத் திட்டத்துக்கு அனுமதி மறுக்கவும் உத்தரவிட வேண்டும் என்றார்.
 இதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் துறைச் செயலர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், தூத்துக்குடி ஆட்சியர், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com