கண்களிலே நீர் பெருக கலங்கி நின்ற போது கை கொடுத்தவர் அன்பழகன்: கருணாநிதி கூறும் 76 வருட நட்பின் கதை 

மாணவப் பருவத்தில் தனக்கு அறிமுகமாகி எத்தனையோ ஆண்டுகளாக கட்சியிலும் ஆட்சியிலும் தனக்குத் துணை நின்றபேராசிரியர் அன்பழகனைப் பற்றிய நினைவுகளை கருணாநிதி பகிர்ந்துள்ளார்.
கண்களிலே நீர் பெருக கலங்கி நின்ற போது கை கொடுத்தவர் அன்பழகன்: கருணாநிதி கூறும் 76 வருட நட்பின் கதை 

சென்னை: மாணவப் பருவத்தில் தனக்கு அறிமுகமாகி எத்தனையோ ஆண்டுகளாக கட்சியிலும் ஆட்சியிலும் தனக்குத் துணை நின்ற பேராசிரியர் அன்பழகனைப் பற்றிய நினைவுகளை கருணாநிதி பகிர்ந்துள்ளார்.

தற்பொழுது 97 வயதாகும் திமுகவின் பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகனின் 89-ஆவது பிறந்த நாளின் பொழுது, அவர் தனக்கு அறிமுகமான கதையினை திமுக தலைவர் கருணாநிதி 2010-ஆம் ஆண்டில் அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அதிலிருந்து சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு:

1942-ம் ஆண்டு திருவாரூர், விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழா ஒன்றில் கலந்துகொள்ள அண்ணா வந்திருந்தார். அண்ணாவின் பேச்சினைக் கேட்பதற்காக இளைஞனாக இருந்த நானும் சென்றிருந்தேன். விழாவில் மற்றவர்கள் பேசிய பிறகு, இறுதியாக அண்ணாவைப் பேசுவதற்காக அழைத்த நேரத்தில், அண்ணா எழுந்து, "நான் பேசுவதற்கு முன்பு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர் ஒருவரை நான் அழைத்து வந்திருக்கிறேன், அவர் உங்கள் முன்னால் பேசுவார்'' என்ற அறிமுகத்தோடு ஒரு இளைஞரை அங்கே பேச வைத்தார். அந்த இளைஞர் தான் இன்று 89வது பிறந்த நாள் காணும் பேராசிரியர் அன்பழகனார்! முதன்முதலாக அங்கேதான் நான் அவரை சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன்.

நான் 18 வயது இளைஞனாக "மாணவ நேசன்'' என்ற பெயரில் கையெழுத்து ஏடு ஒன்றினை நடத்திக் கொண்டிருந்தபோது கதர் சட்டை அணிந்த கண்ணாடிக்காரர் ஒருவர் திருவாரூரில் என்னைச் சந்தித்து "மாணவர்களை எல்லாம் ஒன்றுபடுத்தி சுதந்திரம், சமாதானம், சமத்துவம் ஆகியவைகளுக்காக அணி வகுத்துக் குரலெழுப்ப முன்வரவேண்டும். அதற்குப் பாசறையாக "மாணவர் சம்மேளனம்'' என ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பாளராக நீங்கள் இருந்து திருவாரூர் பள்ளியில் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். அப்படி வந்தவர் ஒரு கம்யூனிஸ்ட் என்பது எனக்கு அப்போது தெரியாது.

சுதந்திரம் - சமாதானம் - சமத்துவம் என்ற வார்த்தைகள் என் உள்ளத்தில் பல உணர்ச்சிகளை ஏற்படுத்தியதால், மாணவர் சம்மேளனத்தின் அமைப்பாளனாக நான் ஆனேன். அதிலே 200 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டார்கள். ஆனால் சம்மேளனத்தின் கோஷமாக "தமிழ் வாழ்க! இந்தி வளர்க'' என்று வலியுறுத்தப்பட்டபோது நான் அதற்கு மறுத்து விட்டேன். உறுப்பினர்களிடமிருந்து பெற்றிருந்த 100 ரூபாயை திருப்பிக் கொடுக்க முனைந்தேன். ஒரு சிலர் அதனைப் பெற்றுக் கொண்டார்கள். பெரும்பாலோர் சம்மேளனத்தைக் கலைத்து விடலாம், கட்டணம் உன்னிடமே இருக்கட்டும் என்றனர். அன்று மாலையே "தமிழ் மாணவர் மன்றம்'' என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, ஏற்கனவே கட்டணத்தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளாதவர்களையெல்லாம் தமிழ் மாணவர் மன்றத்தின் உறுப்பினராக ஆக்கினேன்.

அந்த மன்றத்தின் ஆண்டு விழா 1942ல் திருவாரூரில் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. அவர்கள் எல்லாம் வருவார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்து, அவர்களை வரவேற்க திருவாரூர் புகைவண்டி நிலையத்திலே காத்திருந்தபோது, அவர்களில் பலர் வரவில்லை என்று தெரிந்து கண்களிலே நீர் பெருக கலங்கி நான் நின்று கொண்டிருந்த போதுதான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த - இன்றைய பேராசிரியர், அன்றைய மாணவர் அன்பழகனும், மதியழகனும் அங்கு வந்து எனக்கு ஆறுதல் வழங்கினார்கள்.

இவ்வாறு தங்களது 76 வருடநட்பை திமுக தலைவர் கருணாநிதி நினைவு கூர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com