டிடிவி தினகரன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.
டிடிவி தினகரன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


சென்னையில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்த விவரம்: அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலர் டிடிவி தினகரன் வீடு, சென்னை பெசன்ட் நகர் கற்பகம் அவென்யூவில் உள்ளது. கட்சிக்குள் ஏற்பட்டத் தகராறில், காஞ்சிபுரம் நகர முன்னாள் செயலர் புல்லட் பரிமளம், கட்சியை விட்டு நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
இதைக் கண்டித்து, போராட்டம் நடத்தும் திட்டத்தோடு புல்லட் பரிமளம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தினகரன் வீட்டுக்கு காரில் வந்தார். அப்போது அவர், காரில் இருந்த உருவ பொம்மையை எடுத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்றார்.
இதில் அதை அவர் கவனக்குறைவாக கையாண்டதில், காரில் இருந்த அந்த உருவ பொம்மை தீப்பிடித்து எரிந்தது. இதில் கார் கண்ணாடி உடைந்து, காரும் தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவத்தில் புல்லட் பரிமளம் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் கட்சியினரிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. தினகரன் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல்கள் பரவின. அதை சென்னை காவல்துறை மறுத்தது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தினகரன் கட்சியினர், சென்னை பெருநகர காவல் ஆணையர், டி.ஜி.பி., தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஆகியோரைச் சந்தித்து, தினகரன் வீட்டுக்கு பாதுகாப்புக் கேட்டு மனு அளித்தனர். இதையடுத்து தமிழக அரசின் உத்தரவின்பேரில், தினகரனின் பாதுகாப்பு கருதி, பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடு, அரசின் மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் எனக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தினகரன் வீட்டுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய இரு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என்றும் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com