ஜெயலலிதா மரணம்: 6-இல் ஆஜராக அப்பல்லோ மருத்துவர், செவிலியருக்கு சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், வரும் 6-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்பல்லோ மருத்துவர் கே.ஆர். பழனிச்சாமி, செவிலியர் அனுஷா ஆகியோருக்கு


ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், வரும் 6-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்பல்லோ மருத்துவர் கே.ஆர். பழனிச்சாமி, செவிலியர் அனுஷா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் இதுவரை 30 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தில் பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடமும் அவரது தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர் சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ஆணையத்தின் செயலர், வழக்குரைஞர்கள் நிரஞ்சன், பார்த்தசாரதி, புகைப்படக் கலைஞர் மற்றும் சசிகலா தரப்பு வழக்குரைஞர்கள் ராஜா செந்தூர்பாண்டியன், அரவிந்தன், ஜெ.தீபா வழக்குரைஞர் சுப்பிரமணியன் ஆகியோர் இரவு 7 மணியளவில் ஆய்வு மேற்கொண்டனர்.
மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட 2008 ஆம் எண்அறை, ஸ்கேன் எடுக்கப்பட்ட அறை, உணவு தயாரித்த அறை என 10 இடங்களை அவர்கள் பார்வையிட்டனர்.
இருவருக்கு சம்மன்: இதைத் தொடர்ந்து வரும் 6-ஆம் தேதி ஆஜராகுமாறு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் கே.ஆர். பழனிச்சாமி, செவிலியர் அனுஷா ஆகியோருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
7-இல் குறுக்கு விசாரணை: வரும் 7-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவர்கள் அர்ச்சனா, பிரசன்னா, செவிலியர்கள் ரேணுகா, ஷீலா ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படவுள்ளது. 8-ஆம் தேதி அப்பல்லோ நரம்பியல் மருத்துவர் அருள் செல்வன், கதிர்இயக்க மருத்துவர் ரவிக்குமார் ஆகியோரிடமும், 9-ஆம் தேதி மயக்கவியல் மருத்துவர் கே. பாஸ்கரிடமும் குறுக்கு விசாரணை நடத்தப்படவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com