ஓயாது உழைத்தவன், அண்ணாவோடு ஓய்வு கொண்டிருக்கிறான்

ஓயாது உழைத்தவன், அண்ணாவோடு ஓய்வு கொண்டிருக்கிறான்

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969 ஜூலை 27-இல் கட்சிக்கும், ஆட்சிக்கும் கருணாநிதி பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பிறகு 49 ஆண்டுகளாக கட்சியை நிர்வகித்து வந்த கருணாநிதி திமுகவின் தலைவராக 50-ஆவது ஆண்டில் அண்மையில் தான் அடியெடுத்து வைத்தார்.

1957-இல் முதன்முதலாக குளித்தலை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். இதன்மூலம், திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட முதல் வேட்பாளர் என்ற பெருமையை கருணாநிதி பெற்றார். அப்போது, அவருக்கு தெரியாது இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று. 

அந்த முதல் தேர்தலிலேயே சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற கருணாநிதி முதன்முதலாக சட்டப்பேரவையில் காலடி எடுத்து வைத்தார். அதன்பிறகு, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திருவாரூர் தொகுதி வரை அனைத்து 13 தேர்தல் களங்களிலும் தோல்வியை காணாத ஒரே சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ள ஒரே அரசியல் தலைவர் கருணாநிதி தான். 

இந்த வெற்றி வரலாறு தான் 50 ஆண்டுகால தமிழக அரசியலின் அச்சாணியாக கருணாநிதியை சுழலவைத்துள்ளது. 

கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போதிலும் சரி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலும் சரி பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள் என மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் அளவுக்கு திறன் மற்றும் பலம் வாய்ந்த தலைவராக அவர் செயல்பட்டிருக்கிறார். இன்று கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த தேசிய தலைவர்கள் இதற்கு சிறந்த உதாரணம்.   

திமுகவிலும், அரசியலிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை ஆற்றியவர் என்றாலும், அதற்கு முன்பு இருந்தே அவர் பொதுவாழ்வில் தனது வாழ்க்கையை செலவிட தொடங்கினார். முரசொலி பத்திரிகை நிறுவனராக 75 ஆண்டுகள், சினிமா, இலக்கயிம் என கலைத்துறையில் 70 ஆண்டுகள், சட்டப்பேரவை பணிகளில் 60 ஆண்டுகள் என 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் இடைவிடாது ஈடுபட்டு வந்தார். 

தனது 95 வயதில் 85 ஆண்டுகளை பொதுவாழ்க்கைக்காக ஓய்வில்லாமல் உழைத்தவருக்கு காலம் கட்டாய ஓய்வை வழங்கி அவரை மெரினாவில் அண்ணாவுக்கு மிக அருகில் ஓய்வுகொண்டிருக்க வைத்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com