மெரீனாவில் கருணாநிதியின் உடல் அடக்கம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் உள்ளே புதன்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.
மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் கருணாநிதி உடலை சுமந்த ராணுவ வாகனம்.
மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் கருணாநிதி உடலை சுமந்த ராணுவ வாகனம்.

* லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி 
* 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் உள்ளே புதன்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.
அரைக் கம்பத்தில் தேசியக் கொடி: கருணாநிதியின் மறைவை முன்னிட்டு நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் புதன்கிழமை பறக்க விடப்பட்டது.
ராணுவ வீரர்கள் மரியாதை: தமிழகத்தில் 5 முறை முதல்வராகப் பதவி வகித்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல், ராணுவ வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டது. அவரது உடலை முப்படையினர் சுமந்து வந்தனர். அப்போது பேண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.
இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்த தலைவர்கள் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அடக்கம் செய்வதற்காக ஏற்கெனவே 10 அடி நீளம், 7 அடி அகலத்துக்கு வெட்டப்பட்டிருந்த குழிக்கு அருகே கருணாநிதியின் உடல் திறந்த நிலையில் இருந்த பெட்டியில் வைக்கப்பட்டது.

ராஜாஜி அரங்கில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி.
ராஜாஜி அரங்கில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி.


தலைவர்கள் இறுதி மரியாதை: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திரம், புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், தமிழக ஆளுநர் புரோஹித் உள்ளிட்ட தலைவர்கள் கருணாநிதியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
கதறி அழுத ஸ்டாலின், அழகிரி...: கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது, அவரது மகன்களான மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, மகள் செல்வி உள்ளிட்டோர் கதறி அழுதனர். சுமார் ஒரு மணி நேரம் வரை நடந்த இறுதி அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து, கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல் புதன்கிழமை அதிகாலை முதல் பொது மக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. 12 மணி நேரத்துக்குப் பிறகு சரியாக மாலை 4 மணிக்கு அவரது உடலானது அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது. இந்த வாகனமானது அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக சென்னை மெரீனா கடற்கரை சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தை மாலை 6.12 மணிக்கு வந்தடைந்தது.
முக்கிய பிரமுகர்கள் இறுதி அஞ்சலிக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரிக் ஓ பிரையன், முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் பிரதமர் தேவெ கௌடா ஆகியோர் மலர்வளையம் வைத்து கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருணாநிதியின் உடலுக்கு வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, முப்படையினரும் பேண்ட் வாத்தியங்கள் இசைத்து முழு ராணுவ மரியாதை அளித்தனர்.
ஸ்டாலினிடம் தேசியக் கொடி ஒப்படைப்பு: கருணாநிதியின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி, மகன் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பிறகு, கருணாநிதியின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
மலர் தூவி உறவினர்கள் அஞ்சலி: துணைவி ராஜாத்தியம்மாள், மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, தமிழரசு, மகள் செல்வி, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ஸ்டாலின் மனைவி துர்கா, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன்குழுமத் தலைவர் கலாநிதி மாறன், ஸ்டாலின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன், தமிழரசு மகன் அறிவு நிதி, கனிமொழி மகன் ஆதித்யா உள்ளிட்டோர் மலர்தூவி கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மெரீனாவில் அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்.
மெரீனாவில் அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்.


க.அன்பழகன், நித்யா அஞ்சலி: கருணாநிதியின் உறவினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை, மு.க.ஸ்டாலினும், கனிமொழி மகன் ஆதித்யாவும் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். கருணாநிதியின் உடலுக்கு அன்பழகன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் கருணாநிதியின் உடலின் முன்பாக சிறிது நேரம் அமைதி காத்து நின்றபடியே இருந்தார். அதன்பின், அவரை அழைத்துச் சென்றனர். கருணாநிதியின் தனி உதவியாளராக கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த நித்யாவும் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கதறி அழுத உறவினர்கள்: குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு, கண்ணாடிப் பேழையில் இருந்த கருணாநிதியின் உடலை, முப்படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் சந்தனப் பேழைக்கு மாற்றினர். இதைத் தொடர்ந்து, கருணாநிதியின் உடலுக்கு அவரது உறவினர்கள் அனைவரும் உப்பைத் தூவினர். அப்போது, கனிமொழி, தமிழரசு ஆகியோர் கருணாநிதியின் உடலை வருடிக் கொடுத்து கண்ணீர் சிந்தினர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் போதும், அதைத் தொடர்ந்து உப்பினைப் போடும் போதும் கதறி அழுது கண்ணீர் சிந்திய காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. 
21 குண்டுகள் முழங்க மரியாதை: கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த சந்தனப் பேழை மூடப்பட்டு குழிக்குள் இறக்கப்பட்டது. அப்போது, முப்படை ராணுவ வீரர்கள் 21 குண்டுகளை வெடிக்கச் செய்து ராணுவ மரியாதை அளித்தனர்.
இதன்பின் அடக்கத்துக்காக குழிக்குள் இறக்கப்பட்ட கருணாநிதியின் உடலைத் தாங்கிய சந்தனப் பேழையின் மீது மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி, செல்வி உள்ளிட்ட அனைத்து உறவினர்களும் மண் தூவினர்.

கருணாநிதி உடல் மீது தேசியக் கொடி போர்த்திய ராணுவ வீரர்கள்.
கருணாநிதி உடல் மீது தேசியக் கொடி போர்த்திய ராணுவ வீரர்கள்.


1.23 ஏக்கர் அரசு நிலம்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்காக 1.23 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு அளித்துள்ளது. சென்னை மெரீனா அண்ணா நினைவிடத்துக்கு உள்ளே இந்த நிலம் அளிக்கப்பட்டுள்ளது.
5 மணி நேரத்தில் தயாரான இடம்: கருணாநிதியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதித்து தீர்ப்பளித்தவுடன், கூவம் ஆறு மெரீனா கடற்கரையுடன் இணையும் கழிமுகப் பகுதியை அருகே கொண்டிருக்கக் கூடிய பகுதியில் கருணாநிதியை அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது.
அடக்கம் செய்யப்படும் இடத்தை புதன்கிழமை நண்பகலில் இருந்து சீர்செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் இறங்கியது. இதனிடையே புதன்கிழமை மாலை அடக்கம் நடைபெறும் என திமுக அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சுமார் 5 மணி நேரத்துக்குள் அடக்கத்துக்கான இடம் சீர் செய்து அளிக்கப்பட்டது.
1.23 ஏக்கர் நிலம்: அண்ணா நினைவிடமானது 7.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் கருணாநிதி உடல் அடக்கத்துக்காக 1.23 ஏக்கர் நிலத்தை ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசு உத்தரவு விரைவில் வெளியிடப்படும். அடக்கம் செய்யப்பட்ட இடத்தைத் தவிர்த்து மீதமுள்ள பகுதியில் எத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்பதை கருணாநிதியின் குடும்பத்தினரே முடிவு செய்வர் என்று பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com