கருணாநிதி அஞ்சலி கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் சாவு: போலீஸார் வழக்குப் பதிவு

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த கூடியிருந்த கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரை வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன்.
ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரை வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன்.


திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த கூடியிருந்த கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
திமுக தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் புதன்கிழமை வைக்கப்பட்டிருந்தது. கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு மிக முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தனி, தனியாக வழிகள் அமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் நேரம் செல்ல, செல்ல கூட்டத்தின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருந்ததால், மிக முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்ட கலைவாணர் அரங்கு வாயிலிலும், அரசு பல்நோக்கு மருத்துவமனை வாயில் பகுதியிலும் நெரிசல் அதிகமாக ஏற்பட்டது. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டும், கீழே விழுந்தும், சுவர் ஏறி குதிக்கும்போது தவறி விழுந்தும் சுமார் 51 பேர் காயமடைந்தனர். இவர்களில் மதுரையைச் சேர்ந்த துரை, சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த செண்பகம், வேலூர் மாவட்டம் கஸ்பாவைச் சேர்ந்த லி.மோகன் (65) உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
அதேவேளையில் நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றனர். இதற்கிடையே நெரிசலில் சிக்கி காயமடைந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த பெரவள்ளூர் காவல் நிலைய காவலர் அனிதா உள்பட 7 பேரை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், கூடுதல் ஆணையர் எச்.எம்.ஜெயராம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது அவருடன் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு, அரசு பொதுமருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, ஆர்.எம்.ஓ. இளங்கோ, மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணசாமி ஆகியோர் இருந்தனர்.
ஸ்டாலின் ஆறுதல்: அதேபோல, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு வந்து, நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் திமுக கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
வழக்கு: இதற்கிடையே, நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திருவல்லிக்கேணி போலீஸார் சாதாரண சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையை போலீஸார் தொடங்கியுள்ளனர். இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், வழக்கின் சட்டப் பிரிவுகள் மாற்றப்படும் என சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர் வேலூர் அதிமுக பிரமுகர்: சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட 4 பேரில் உயிரிழந்த ஒருவர் வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த மோகன் (65) என்பது தெரியவந்துள்ளது. இவர் வேலூர் கஸ்பா பகுதியின் அதிமுக துணைச் செயலராக பொறுப்பு வகித்து வந்தார். கருணாநிதியின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த மோகன், அவருக்கு அஞ்சலி செலுத்தச் சென்று நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மோகனின் மனைவி பார்வதி கூறுகையில், அண்ணா காலத்தில் திமுகவில் இருந்த எனது கணவர் மோகன், எம்ஜிஆர் பிரிந்து சென்றபோது அதிமுகவில் இணைந்தார். இருப்பினும், கருணாநிதியின் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை செலுத்தி வந்தார். கருணாநிதி இறந்த தகவலறிந்த எனது கணவர், அவருக்கு அஞ்சலி செலுத்த சென்னைக்குப் புறப்பட்டார். குடும்பத்தினர் சென்னை செல்ல வேண்டாம் என தடுத்தபோதும், திராவிடத் தலைவர்களில் கடைசித் தலைவர் இறந்துவிட்டார். கட்டாயமாக அவரது உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்தியாக வேண்டும் எனக் கூறி ரூ. 2 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு சென்னைக்கு ரயிலில் சென்றார். அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துவிட்டார் என்றார்.
உயிரிழந்த மோகனுக்கு மனைவி பார்வதி, மகன் பாலாஜி, மகள் இந்துமதி ஆகியோர் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com