ஸ்ரீரங்கம் சிலை வழக்கு: டிவிஎஸ் நிர்வாகி வேணு சீனிவாசனை கைது செய்யத் தடை 

ஸ்ரீரங்கம் கோயில் சிலை காணாமல் போனதாகத் தொடரப்பட்ட வழக்கில் டிவிஎஸ் நிர்வாகி வேணு சீனிவாசனை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஸ்ரீரங்கம் சிலை வழக்கு: டிவிஎஸ் நிர்வாகி வேணு சீனிவாசனை கைது செய்யத் தடை 


சென்னை: ஸ்ரீரங்கம் கோயில் சிலை காணாமல் போனதாகத் தொடரப்பட்ட வழக்கில் டிவிஎஸ் நிர்வாகி வேணு சீனிவாசனை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் மாயமானதாகத் தொடரப்பட்ட வழக்கில் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரியிருந்தார்.

கோயில் சிலைகள் மாயமானதாத் தொடரப்பட்ட வழக்கில் தன் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. எனவே, இந்த வழக்கில் கைது செய்யத் தடை விதிக்கும்படி முன் ஜாமீன் மனுவில் கூறப்பட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, வேணு சீனிவாசனை 6 வார காலத்துக்குக் கைது செய்ய தடை விதித்தது.

ஸ்ரீரங்கம் கோயில் சிலை காணாமல் போன வழக்கில், 6 வாரத்துக்கு வேணு சீனிவாசனை கைது செய்ய மாட்டோம் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவும் காவல்துறையும் பதில் அளித்துள்ளது.

மேலும், முன் ஜாமீன் மனு மீது பதிலளிக்கவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி: ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள சிலைகள் மாயமான விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உற்சவர் மற்றும் மூலவர் சிலைகள் மாயமாகி உள்ளன. மேலும், கோயிலின் பழங்காலப் பொருள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறியதாவது:-கடந்த 2012-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தச் சமயத்தில் திருக்கோயிலில் உள்ள சிலைகள் சீரமைக்கப்பட்டன. சிலைகள் எதுவும் மாயமாகவில்லை. அனைத்துச் சிலைகளும் திருக்கோயிலில் பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளன. பாரம்பரிய கட்டடங்களைச் சிறப்பாக புதுப்பித்தமைக்காக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது '' என்று தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்ரீரங்கம் கோயில் சிலை மாயமானதாக கொடுக்கப்பட்ட புகார் மீது ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு 6 வார காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com