கருணாநிதி நினைவிடம்: அரசு மேல்முறையீடு செய்திருந்தால் போராடியிருப்பேன்: ரஜினிகாந்த்

கருணாநிதி நினைவிட விவகாரத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தால், நானே களத்தில் இறங்கிப் போராடியிருப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 
நடிகர் சங்கத்தின் சார்பில் கருணாநிதிக்கு திங்கள்கிழமை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால், 
நடிகர் சங்கத்தின் சார்பில் கருணாநிதிக்கு திங்கள்கிழமை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால், 


கருணாநிதி நினைவிட விவகாரத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தால், நானே களத்தில் இறங்கிப் போராடியிருப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 
திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது:
தமிழகத்தில் 50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தைக் கட்டிக் காத்தவர் கருணாநிதி. அவர் இல்லாத தமிழகத்தை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கருணாநிதியால் தொண்டர்களாக அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் பேர். முழுநேர அரசியலுக்கு வந்தவர்கள் பல ஆயிரம் பேர். அவரால் தலைவராக ஆனவர்கள் பல நூறு பேர்.
அதிமுக உருவானதே...அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆண்டு விழாவுக்கு எம்.ஜி.ஆர். புகைப்படத்தை வைக்கிறார்கள். அதற்குப் பக்கத்தில் கருணாநிதியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அதிமுக உருவானதே கருணாநிதியால்தான்.
வஞ்சகங்களைத் தாண்டி... பல சூழ்ச்சிகள் உள்பட என்ன நடந்தது என்பது அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும். எத்தனை வஞ்சகங்கள் தாண்டி அவருடைய உடன்பிறப்புகளுக்காக அவர் வாழ்ந்தார். அவருடைய அரசியல் பயணத்தைப் பற்றிப் பேசுவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. நிறைய சந்தர்ப்பங்கள் வரும்.
இலக்கியத்தில்...இலக்கியத்தில் அவர் செய்தது சாதாரண சாதனை அல்ல. இருட்டில் இருந்த பல்லவர், சோழர், பாண்டியர், சிற்றரசர்கள் உள்ளிட்ட வெளிச்சம் படாதவர்களைத் தனது சொல்லால், எழுத்தால் பாமரர் வரைக்கும் கொண்டு போய் சேர்த்தவர் கருணாநிதி.
எம்.ஜி.ஆர்., சிவாஜியை... சினிமாவைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நடிகராக இருந்த எம்ஜிஆரை ஸ்டாராக்கியது மலைக்கள்ளன்'. 
ஒரே ஒரு படத்தில் சிவாஜியை சூப்பர் ஸ்டாராக ஆக்கியவர் கருணாநிதி. அவர் மறைந்தார் என்றவுடன் என்னால் தாங்க முடியவில்லை. அவருடைய பேச்சுகள், அவருடனான தருணங்கள் எனது நினைவில் வந்து கொண்டே இருந்தது. தொலைக்காட்சியில் பார்க்கிறேன். கோபாலபுரத்தில் அவ்வளவு கூட்டம். கூட்டமிருந்தாலும் பரவாயில்லை என்று கோபாலபுரத்துக்குப் போனேன். அவ்வளவு கூட்டத்தில் முடியாததால் திரும்பி வந்துவிட்டேன்.
மனம் உடைந்தேன்: அடுத்த நாள் காலை 6 மணியளவில் அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்குக்குச் சென்றேன். அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு, திரும்பிப் பார்க்கும் போது பல ஆயிரம் பேர் கொண்ட கூட்டமே இருந்தது. எனக்கு மனம் உடைந்துவிட்டது. 
இவ்வளவு பெரிய தலைவனுக்கு, கூட்டம் இவ்வளவு தானா, எங்கே அவருடைய உடன்பிறப்புகள், தமிழ் மக்களுக்காக எவ்வளவு உழைத்திருக்கிறார், எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார், இவ்வளவு தானா கூட்டம் என்று மனம் உடைந்துவிட்டது.
காணாமல் போன கோபம்: தமிழ் மக்கள் மீது எனக்கு கோபம் வந்தது. இரவு தூங்காததால் தூங்கிவிட்டு மதியம் எழுந்து தொலைக்காட்சி பார்த்தேன். அலை அலையாய் கூட்டம், கட்டுக்கடங்காத கூட்டம். அந்தக் கூட்டத்தைப் பார்த்து தங்க மகனுக்கு தகுந்த மரியாதை. தமிழர்கள் தமிழர்கள்தான்யா' என்று கண்ணீர் வந்துவிட்டது.
அடக்கம் செய்தபோது முதல்வர் இல்லையே? ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிகளும் வந்தார்கள். முப்படை வீரர்கள் மரியாதை கொடுத்து 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்தார்கள். அதில் ஒரே ஒரு குறை. இந்த இடத்தில் சொல்லலாமா வேண்டாமா என்று தெரியாது. இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். ஆளுநர் தொடங்கி அனைத்து மாநில முதல்வர்கள் என வந்த போது, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடக்க இடத்துக்கு வர வேண்டாமா? அங்கு இருக்க வேண்டாமா?
அந்த அமைச்சரவையே அங்கு இருக்கக் கூடாதா? இதைப் பார்த்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். நீங்கள் எல்லாம் எம்ஜிஆரா, ஜெயலலிதாவா? எதிரிகள் எல்லாம் அதோடு போய்விட்டது. ஜாம்பவான்கள் மோதினார்கள், இப்போது வேண்டாம். எதிர்க்கட்சியினர் இவர்கள் அவ்வளவுதான். 
போராட்டத்தில் இறங்கியிருப்பேன்: மெரீனாவில் இடம் கொடுத்தீர்கள், மேல்முறையீடு போகவில்லை. அப்படிப் போயிருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். ஸ்டாலின் கண்ணீர் விட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு அவரது உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அவர் கவலைப்படவேண்டாம்.
ஸ்டாலினுக்கு...அப்பாவின் கடமைகள், அவர் வந்த வழி அனைத்துமே உங்களுக்கு வழிகாட்டும். கருணாநிதி என்னும் மாமனிதர் எனக்கு நண்பனாக இருந்தார். அவர் கூட நிறைய நாள்கள் செலவழித்தேன் என்பது ரொம்ப மகிழ்ச்சி. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும் என்றார் நடிகர் ரஜினிகாந்த்.
பங்கேற்றோர்: நடிகர் சங்கத் தலைவர் நாசர் உள்ளிட்ட நிர்வாகிகள், திரைத்துறை அமைப்புகளின் நிர்வாகிகள் , திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com