சவால்களை வென்று காட்டுவேன்

திமுகவுக்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்று காட்டுவேன்; சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என்று கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சவால்களை வென்று காட்டுவேன்


திமுகவுக்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்று காட்டுவேன்; சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என்று கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுகவின் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:
சூரியன் இல்லாத வானமாக கருணாநிதியை இழந்து தவிக்கும் திமுகவின் கோடி உறுப்பினர்களில் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்ற வேதனைக் கடலில் எல்லோர் மனமும் தத்தளிக்கிறது.
கலங்கரை விளக்கம்: கடலில் தவிக்கும் கலன்களுக்குக் கரை காட்டும் பணியைச் செய்வது கலங்கரை விளக்கம். திமுக எனும் கப்பலுக்கு கடற்கரையில் அண்ணா, கருணாநிதி என இரண்டு கலங்கரை விளக்கங்கள் ஒரே திசையில் ஒளி வீசி வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. அந்த ஒளியின் வழியில் பயணித்தால், அவர்கள் வழியிலேயே திமுகவின் லட்சியம் எனும் கரையினைத் தொட்டுவிட முடியும். 
கருணாநிதியின் லட்சியத்தைக் காக்க... அந்த நம்பிக்கையுடன்தான் ஆகஸ்ட் 14-இல் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்க திமுகவின் செயற்குழுவைக் கூட்டினோம். அதில், கருணாநிதியின் லட்சியத்தைக் காக்க அனைவர் முன்பும் உறுதியேற்றேன்.
சடங்கு அல்ல-சூளுரை: கருணாநிதிக்கு இரங்கல் என்பதும் நினைவேந்தல் என்பதும் வெறும் சடங்கல்ல. லட்சியம் காப்பதற்கான சூளுரை. அவர் முன்னெடுத்த போராட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு, வெற்றி நோக்கி ஒருங்கிணைந்து பயணிப்போம் என்பதற்கான உறுதியேற்பு. 
திமுகவைக் காத்தார்: எந்த நிலையிலும் குலையாத எஃகு உள்ளம் கொண்டவர் கருணாநிதி. நெருக்கடி நிலையா, எதிரிகளின் வசவா, வீண் பழியா, ஆட்சிக் கலைப்பா, தேர்தல் தோல்வியா, தொடர்ந்து துரத்தும் துரோகங்களா, துயரம் தரும் பிரிவுகளா எதுவாக இருந்தாலும் அதனை இயல்பாக எதிர்கொண்டு திமுகவைக் கண் போலக் காத்தவர் அவர்.
ஆற்றலைக் கேட்டேன்: அண்ணா மறைந்தபோது திமுகவையும், அரசையும் தன் இரு தோள்களில் தாங்க வேண்டிய பெரும் பொறுப்பு கருணாநிதிக்கு இருந்தது. பன்முக ஆற்றல் கொண்ட கருணாநிதியே அந்தப் பொறுப்புச் சுமையைத் தாங்குவதற்கு எதையும் தாங்கும் தன்மை கொண்ட அண்ணாவின் இதயத்தை இரவலாகக் கேட்டார். நான், கருணாநிதி அல்ல. கருணாநிதியின் மகன் என்ற பெருமையும், அதைவிட அவரது உடன்பிறப்புகளான உங்களில் ஒருவன் எனும் உரிமையும், திமுகவின் தலைமைத் தொண்டனாக இருந்து செயல்பட வைக்கிறது. 
அதனைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காகத்தான் ஜூன் 3-ஆம் நாள் திருவாரூரில் நடைபெற்ற கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில், அவரது ஆற்றலில் பாதியைக் கேட்டேன். தற்போது அவர் நம்மை விட்டுச் சென்றுள்ள நிலையில் அவர் வழங்கிய ஆற்றலைக் கொண்டு திமுகவைக் கட்டிக் காக்கும் பொறுப்பைத் துணிந்து ஏற்றுள்ளேன். திமுக தொண்டர்கள் என்றென்றும் பக்கபலமாக இருப்பார்கள் என்கிற அசையாத நம்பிக்கைதான் இந்தத் துணிவுக்குக் காரணம். 
பாஜகவின் அக்கறை: திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் சிகரமாக உயர்ந்திருந்த தமிழகத்தைப் படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள் மாநில ஆட்சியாளர்கள். மதவெறியை விதைத்து, மாநில உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கின்றனர் மத்திய ஆட்சியாளர்கள். கருணாநிதியை இழந்த திமுகவில் என்ன நடக்கிறது என்பதில் நம்மை விட அக்கறை' காட்டுகிறார்கள் அரசியல் எதிரிகள். 
அஞ்சமாட்டேன்: நான் கருணாநிதியில் வளர்த்தெடுக்கப்பட்டவன். சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன். திமுகவுக்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்று காட்டுவேன் என்று அவர் கூறியுள்ளார்.
மு.க.அழகிரி மீது தாக்குதல்: கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் என் பக்கம்தான் உள்ளனர்' 
என மு.க.அழகிரி கூறியிருந்தார். இது திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுகவின் செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டாலின் எந்தவிதப் பதிலும் தெரிவிக்கவில்லை. 
இந்த நிலையில், திமுகவினருக்கு எழுதிய கடிதத்தில் அழகிரியின் சவாலைச் சமாளிப்பேன் என்று ஸ்டாலின் மறைமுகமாகக் கூறியுள்ளதுடன், அரசியல் எதிரிகள் திமுகவில் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com