தமிழர்கள் மீண்டும் குடியேறத் தடை இல்லை: இலங்கை அமைச்சர் பேட்டி

இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டு அகதிகளாக வெளிநாடுகளில் சென்று தங்கியவர்கள் மீண்டும் குடியேறத் தடை இல்லை என்றார்
திருச்சியில் புதன்கிழமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீனை சந்தித்துப் பேசுகிறார் இலங்கை அமைச்சர் சையது அலி ஜாகீர் மௌலானா.
திருச்சியில் புதன்கிழமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீனை சந்தித்துப் பேசுகிறார் இலங்கை அமைச்சர் சையது அலி ஜாகீர் மௌலானா.


இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டு அகதிகளாக வெளிநாடுகளில் சென்று தங்கியவர்கள் மீண்டும் குடியேறத் தடை இல்லை என்றார் இலங்கை தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசுகரும மொழிகள் துறை இணை அமைச்சர் சையதுஅலி ஜாகிர் மௌலானா.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க புதன்கிழமை வந்த அவர், முன்னதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர்மொய்தீனை அவரது இல்லத்தில் சந்தித்தபோது செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி :
இலங்கையில் மைத்ரிபாலா சிறீசேனா தலைமையில், எங்களது கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் பங்களிப்புடன், இலங்கையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்திய-இலங்கை உறவை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
குறிப்பாக, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் இருந்த ராணுவ பாதுகாப்பு குறைக்கப்பட்டு, அங்கிருந்து சுமார் 60 சதவீத ராணுவத்தினர் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். விரைவில் முகாம்களும் அகற்றப்படும். 
போரால் பாதிக்கப்பட்டு வெளிநாடு சென்று அகதிகளாகவும், மற்ற வகையிலும் தங்கியுள்ள தமிழர்கள் இலங்கைக்கு குடியேற வழி வகை செய்யப்பட்டுள்ளது. அவர்களது இழந்த வீடுகள் மற்றும் சொத்துகளை மீண்டும் வழங்கும் வகையில் மக்களவையில் சட்டம் இயற்றப்பட்டு தேவையான வழிகளும், உதவிகளும் செய்யப்படுகின்றன. எனவே வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் குடியேற தடையேதும் இல்லை. 
மீனவர்கள் பிரச்னைதான் தொடர்ந்து வருகிறது. இது குறித்து இரு அரசுகளும் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், அது தொடர்பான இரங்கல் கடிதத்தை காதர் மொய்தீனிடம் கொடுத்து மு.க. ஸ்டாலின் மற்றும் குடும்பத்தாரிடம் வழங்குமாறு கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com