கேரளம் செல்லும் ரயில்கள் சேலம், ஈரோடு, கோவை ரயில் நிலையங்களில் நிறுத்தம்

கேரள மாநிலத்தில் கடும் மழை வெள்ளம் நீடிப்பதால், பாலக்காடு வழியாகச் செல்லும் கேரள ரயில்கள் சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு, புறப்பட்டுச் சென்றன.


கேரள மாநிலத்தில் கடும் மழை வெள்ளம் நீடிப்பதால், பாலக்காடு வழியாகச் செல்லும் கேரள ரயில்கள் சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு, புறப்பட்டுச் சென்றன.
கேரள மாநிலத்தில் கடும் மழை வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கேரளத்தின் பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் வழியாகச் செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, எர்ணாகுளம், திருச்சூர், கோட்டயம், செங்கன்னூர் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம், மண் சரிவு போன்ற பேரிடரால் ரயில் போக்குவரத்து அந்த வழியாக இயக்கப்படாமல் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது. 
பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் வழியாக அதாவது நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு வழியாக கேரள ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகின்றன. கேரளத்தில் மேலும் மழை நீடிக்கும் என்று அறிவித்திருப்பதால், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் பாலக்காடு வழியாக கேரளம் செல்லும் ரயில்களின் கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஹைதராபாத் - திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயில், ஈரோடு ரயில் நிலையத்திலும், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூரிலும், பொகரோ எக்ஸ்பிரஸ் ரயில் கோவையிலும் நிறுத்தப்பட்டன. பின்னர் குறிப்பிட்ட இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்றன. இந்திய ரயில்வே வரலாற்றிலேயே ரயில்கள் குறிப்பிட்ட நிறுத்தங்களுக்குச் செல்லாமல், பிற நிலையங்களில் நிறுத்தப்பட்டு புறப்பட்டு சென்றது இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம், திருவனந்தபுரம் -கண்ணூர், மங்களூரு - திருவனந்தபுரம், கோழிக்கோடு - திருவனந்தபுரம், ஷொரணூர் - திருவனந்தபுரம், கண்ணூர்-எர்ணாகுளம் உள்ளிட்ட 15 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 5 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கேரளம் செல்லும் பயணிகள் கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர். கேரளத்தில் மழை நீடிக்கும் வரை தொடர்ந்து மாற்று வழியில் ரயில் சேவை இயக்கப்படும் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com