கேரளாவுக்கு நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் தாராளமாக வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டும்: மு.க.ஸ்டாலின்

இயற்கை பேரிடரில் சிக்கித் தவிக்கும் கேரள அரசுக்கு நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் தாராளமாக வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேரளாவுக்கு நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் தாராளமாக வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டும்: மு.க.ஸ்டாலின்

இயற்கை பேரிடரில் சிக்கித் தவிக்கும் கேரள அரசுக்கு நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் தாராளமாக வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரிடரில் 324 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற துயரச் செய்தி இதயத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது. பேரழிவில் ஏற்பட்டுள்ள சேதங்களின் பட்டியல் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. பேய் மழையின் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற கேரள அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவிகள் இன்னும் கேரள மாநிலம் சென்றடையவில்லை என்று வரும் செய்திகள் வேதனையளிப்பதாக உள்ளன.

இந்நிலையில் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி வைத்து விட்டு, பெருந்துயரத்தில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களுக்கு நேசக்கரம் நீட்டி அவர்களை இந்த பேராபத்திலிருந்து உடனடியாக மீட்பதற்கும், வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் மத்திய அரசு உடனடியாக உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு மாநில மக்கள் துன்பத்தின் உச்சியில் துடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டியது அண்டை மாநிலங்களின் கடமை மட்டுமல்ல - தமிழர்களுக்கே உள்ள இயற்கையான குணம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஆகவே, கேரள அரசுக்கு தேவையான நிர்வாக ரீதியான ஒத்துழைப்பையும், நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் தாராளமாக வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

இது தவிர உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி தங்களின் வீடுகளையும் இழந்த மக்களை கேரள மாநில அரசு முகாம்களில் தங்க வைத்து தேவையான உதவிகளை செய்து வருகிறது. மனித நேயமிக்க இந்தப் பணியில் திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆகவே, கழக மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கழக உடன்பிறப்புகளிடமும், தாமாக மனமுவந்து உதவி செய்ய முன் வரும் பொதுமக்களிடமும் போதிய உணவுப் பொருட்கள், துணி மணிகள், போர்வைகள், நேப்கின்கள் உள்ளிட்ட அன்றாடத் தேவைக்குப் பயன்படும் பொருட்களைச் சேகரித்து கேரள மாநிலத்தில் உள்ள கழக நிர்வாகிகள் மூலம் அம்மாநில மக்களுக்கு அளித்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு வழங்கப்படும் பொருட்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com