150 பொறியியல் கல்லூரிகளில் 50-க்கும் குறைவான மாணவர்கள் சேர்க்கை: 10 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத சேர்க்கை

பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரி உள்பட 10 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
150 பொறியியல் கல்லூரிகளில் 50-க்கும் குறைவான மாணவர்கள் சேர்க்கை: 10 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத சேர்க்கை


பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரி உள்பட 10 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
268 கல்லூரிகளில் 100-க்கும் குறைவான மாணவர்களும், அதில் 150 கல்லூரிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களும் சேர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
97,980 காலியிடங்கள்: தமிழகம் முழுவதும் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் 1,72,581 அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. முதலில் சிறப்புப் பிரிவினர், பின்னர் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. பொதுப் பிரிவு கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், மொத்தமாக 74,601 பேர் மட்டுமே சேர்க்கை பெற்றனர். 97,980 பி.இ. இடங்கள் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.
47 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கை: அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், பி.இ. கலந்தாய்வின் முடிவில் 47 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, 9 பொறியியல் கல்லூரிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளார். 6 கல்லூரிகளில் தலா 2 பேர், மேலும் 6 கல்லூரிகளில் தலா 3 பேர், அடுத்த 6 கல்லூரிகளில் தலா 4 பேர், 3 கல்லூரிகளில் தலா 5 பேர், , 4 கல்லூரிகளில் தலா 6 பேர், 7 கல்லூரிகளில் தலா 7 பேர், 5 கல்லூரிகளில் தலா 8 பேர், ஒரு கல்லூரியில் 9 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதே போன்று, 268 கல்லூரிகளில் 100-க்கும் குறைவான மாணவர்களும், அதில் 150 பொறியியல் கல்லூரிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர்.
10 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத சேர்க்கை: மொத்தமுள்ளவற்றில் 10 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பியிருக்கின்றன. இதில் ஒன்று மட்டுமே சுயநிதி பொறியியல் கல்லூரி. 43 கல்லூரிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. 136 கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பியிருக்கின்றன.
மற்ற கல்லூரிகள் அனைத்திலும் 50 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. அதிலும், 81 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.
இயந்திரவியல், சிவில் மீது ஆர்வம் குறைவு: கடந்த ஆண்டு வரை பி.இ. இயந்திரவியல் படிப்பே மாணவர் சேர்க்கையில் முன்னிலை பெற்று வந்த நிலையில், இந்த முறை இந்தப் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துள்ளது. இந்த முறை 15,149 மாணவர்கள் சேர்க்கையுடன் பி.இ. கணினி அறிவியல் (சிஎஸ்இ) படிப்பு முன்னிலை வகிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக 14,177 மாணவர்கள் சேர்க்கையுடன் இயந்திரவியல் படிப்பு இரண்டாம் இடத்திலும், 12,930 மாணவர் சேர்க்கையுடன் மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) படிப்பு மூன்றாம் இடத்திலும் உள்ளன. மின்னியல் மின்னணுவியல் பொறியியல் (இஇஇ) படிப்பு 7,827 மாணவர் சேர்க்கையுடன் நான்காம் இடத்தில் உள்ளது. 
பி.இ. கட்டடவியல் (சிவில்) படிப்பில் இந்த முறை மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 5,232 பேர் மட்டுமே இந்தத் துறையில் சேர்ந்துள்ளனர். பி.இ. தகவல் தொழில்நுட்பப் படிப்பில் (ஐடி) 5,012 பேர் சேர்ந்துள்ளனர்.
பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது. உடனடி வேலைவாய்ப்புக்கு உதவக் கூடிய கல்லூரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்துள்ளனர். எனவே, பொறியியல் பாடத் திட்டத்திலும், கற்றல் முறையிலும், தேர்வு நடைமுறையிலும் மிகப் பெரிய மாற்றத்தை உடனடியாகக் கொண்டுவரவேண்டியது மிக அவசியம்.
கல்லூரிகள் வழக்கமான உள்கட்டமைப்புகளுக்கு செலவழிப்பதைத் தவிர்த்துவிட்டு, மாணவர்களின் புரிதலை மேம்படுத்தக்கூடிய உயர் கற்றல் மையங்கள், ஆற்றல்சார் மையங்களை உருவாக்க வேண்டிய முயற்சியில் ஈடுபடவேண்டும். இல்லையெனில் வரும் ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமடையும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com