ஆடி அமாவாசையின்போது தாமிரவருணியில் நீர் மாசு குறைவு: சுற்றுச் சூழல் விஞ்ஞானி தகவல்

ஆடி அமாவாசையின்போது தாமிரவருணியில் நீர் மாசு குறைவு: சுற்றுச் சூழல் விஞ்ஞானி தகவல்

ஆடி அமாவாசையின் போது தாமிரவருணி ஆற்றில் நீர் மாசுபாடு குறைந்துள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

ஆடி அமாவாசையின் போது தாமிரவருணி ஆற்றில் நீர் மாசுபாடு குறைந்துள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பரமகல்யாணி சுற்றுச்சூழல் மையப் பேராசிரியர் ஏ.ஜி. முருகேசன், நிகழாண்டு ஆய்வு முடிவுகள் குறித்து கூறியது:  தாமிரவருணி பாயும் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் நதியின் மாசு குறித்து சுமார் 35 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறோம். 
நிகழாண்டும் காரையாறு அணைப் பகுதியிலிருந்து பாபநாசம் கோயில் வரை பல்வேறு இடங்களில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆராய்ச்சிக்கு உள்படுத்தப்பட்டன. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை முறையில் தண்ணீரில் உள்ள பீகல் கோலிபார்ம் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அளவிடப்பட்டது.
இந்த வகை பாக்டீரியாக்கள் வயிற்றுப் போக்கு, நிமோனியா, சிறுநீர் கோளாறு மற்றும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்களை உருவாக்குகின்றன. 
நிகழாண்டு ஆடி அமாவாசைக்கு முந்தைய காலகட்டத்தில் காரையாறில் எடுக்கப்பட்ட நீர் மாதிரியில் 9 எம்.பி.என். அளவிலும், ஆடி அமாவாசை நாளில் 11 எம்.பி.என். அளவிலும் இருந்தது.  சொரிமுத்து அய்யனார் கோயிலிலிலிருந்து சுமார் 3.5 கி.மீ. தொலைவில் தாமிரவருணி ஆற்றில் எடுக்கப்பட்ட மாதிரியில் ஆடி அமாவாசைக்கு நான்கு நாள்களுக்கு முன்பு 11 எம்.பி.என். மற்றும் 2 நாள்களுக்கு முன்பு 18 முதல் 42 எம்.பி.என்., ஆடி அமாவாசை நாளில் 180 எம்.பி.என்., ஆடி அமாவாசைக்கு அடுத்த 2 நாள்கள் கழித்து 42 முதல் 38 எம்.பி.என். என்ற அளவில் கோலிபார்ம்கள் பதிவாகியிருந்தன. சாதாரண நாள்களில் 18 முதல் 960 எம்.பி.என். என்ற அளவில் இருந்தது. 
கடந்த கால அளவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது நிகழாண்டு கோலிபார்ம்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. சேர்வலாறு மற்றும் காரையாறு அணைகளிலிருந்து தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கோலிபார்ம்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
குடிநீரில் கோலிபார்ம்களின் எண்ணிக்கை 100 மி.லி. நீரில் 0 முதல் 50 எம்.பி.என். என்ற அளவில் இருக்க வேண்டுமென்று உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
கோயிலிலில் பலியிடப்பட்ட ஆயிரக்கணக்கான விலங்குகளின் கழிவுகள் ஆற்றில் கலக்காமல் செய்தது, புதிதாக கழிப்பறைகள் அமைத்தது, கழிப்பறைக் கழிவுகள் ஆற்றில் கலக்காமல் செய்தது, பொதுமக்கள் தற்காலிக கழிப்பறைகளைப் பயன்படுத்தியது, முக்கியமான இடங்களில் பொதுமக்கள் தங்க அனுமதிக்கப்படாதது உள்ளிட்ட நடவடிக்கைகளால் நீர் மாசுபாடு குறைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com