தங்கதமிழ்செல்வன் கூறியிருப்பது அவரது சொந்த கருத்து: அமைச்சர் கடம்பூா் ராஜூ

அதிமுகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்தால்தான் திமுகவை எதிர்கொள்ள முடியும் என்று தங்கதமிழ்செல்வன்
தங்கதமிழ்செல்வன் கூறியிருப்பது அவரது சொந்த கருத்து: அமைச்சர் கடம்பூா் ராஜூ


நாகர்கோவில்: அதிமுகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்தால்தான் திமுகவை எதிர்கொள்ள முடியும் என்று தங்கதமிழ்செல்வன் கூறியிருப்பது அவரது சொந்த கருத்து என்று தமிழக செய்தி மற்றும் விளம்பத்துறை அமைச்சர் கடம்பூா் ராஜு தெரிவித்தார். 

தினகரன் ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தங்க தமிழ்செல்வன் இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் அமமுக வளர்ச்சி பெற்று வருகிறது. வருகிற தேர்தல்களில் அதிமுக - அமமுக இணையாமல் ஜெயிக்க முடியாது என எண்ணி இரு கட்சிகளையும் இணைய வைக்க பாஜக முயற்சி செய்து வருவதாக அறிகிறோம்.

அதிமுகவையும், இரட்டை இலையையும் அழிக்க நாங்கள் வரவில்லை. எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அதிமுகவும் இருக்க வேண்டும், இரட்டை இலையும் இருக்க வேண்டும். திமுக தான் எங்களுக்கு முதல் எதிரி. முதல்வரையும், சில அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் மாற்றி ஜெயலலிதா ஆட்சியை அமைத்தால் அதிமுகவுடன் அமமுக இணைய தயார் என   தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில், இன்று நடைபெற்ற அதிமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் கடம்பூா் ராஜு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்தால்தான் திமுகவை எதிர்கொள்ள முடியும் என்று தங்கதமிழ்செல்வன் கூறியிருக்கிறார் அது அவரது சொந்த கருத்து. இன்று அதிமுகவை அம்மாவின் ஆன்மாவின் துணையோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் சிறப்பாக நடத்திச் செல்கிறார்கள் என்றார். 

மேலும், காவிரி நடுவர் மன்ற தீா்ப்பின்படி தமிழகம் ஏற்றுக்கொண்டால் தான் காவிரியின் குறுக்கே அணைகட்டமுடியும் என்ற விதி உள்ளது. தமிழர் நலன் பாதிக்கும் வகையில் மேக்கேதாட்டு மட்டுமல்ல எந்த இடத்தில் அணை கட்டினாலும் நாங்கள் எதிர்ப்போம். 

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு சாதகமான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்கும். கண்டிப்பாக தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றார்.

கஜா புயல் நிவாரணம் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசு முதல்கட்டமாக நிதி அறிவித்துள்ளது. மத்திய குழு ஆய்வு செய்த அறிக்கையை சமா்ப்பித்த பிறகு நிதி வழங்குவார்கள். கஜா புயலால் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளோம். நிச்சயமாக மத்திய அரசு நிதி அளிக்கும் என கூறினார் கடம்பூா் ராஜூ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com