போராட்டம் என்ற பெயரில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை

போராட்டம் என்ற பெயரில் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
போராட்டம் என்ற பெயரில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை

போராட்டம் என்ற பெயரில் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
 குமரி மாவட்ட வளர்ச்சிக்கான மாவட்ட மருத்துவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் பேசியது:
 தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்வளத்துக்காக சில தொழில்கள் நிரந்தரமாக அமைவது உண்டு. லாரிகள் இயக்கம் மற்றும் முட்டைக்கு நாமக்கல், ஆழ்துளை கிணற்றுக்கு திருச்செங்கோடு என இந்தியாவில் இந்த மாவட்டங்கள் முதன்மையாக இருப்பதுபோல குமரி மாவட்டத்தையும் நாம் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து குழு அமைத்து குமரி மாவட்ட வளர்ச்சி குறித்து கலந்தாலோசிக்க வேண்டும்.
 குமரி மாவட்டத்தில் மருத்துவர்கள் அதிகம். எனவே, மருத்துவத் துறையில் மக்களுக்கு பயன்படும்படியாக திட்டங்களை ஒன்றிணைத்து செயல்படுத்தலாம். குமரி மாவட்ட வளர்ச்சிக்காக நான் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன். ஆனால், சிலர் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
 சாய் சப் சென்டர் திட்டம் கொண்டு வந்தேன். அது இடம் மாற்றப்பட்டபோது யாரும் போராடி தக்கவைக்கவில்லை என்பது வேதனை. திட்டங்கள் எதுவும் குறிப்பிட்ட ஜாதிக்கோ, மதத்துக்கோ, அரசியல் கட்சிக்கோ உரியது அல்ல. அனைத்துத் தரப்பு மக்களுக்கானது. இனயம் துறைமுகம் அமைக்க முதலில் எதிர்ப்பு இல்லை. ஆனால், சிலர் தூண்டிவிட்டனர். இத்தனைக்கும் மீனவ கிராமங்களில் பாதிப்பு கிடையாது. ஆனால், உள்கிராமங்களில் 200 வீடுகள் பாதிக்கப்படும். எதிர்ப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று கோவளம் - மணக்குடி இடையே ஒரு வீடுகூட பாதிக்காத வகையில் 3 கி.மீ. தொலைவில் அரசு புறம்போக்கு நிலத்தில் துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. துறைமுகம் அமைக்க கல் போடுவதால் பாதிப்பு என்றால் மீன்பிடித் துறைமுகம் மற்றும் தூண்டில் வளைவால் பாதிப்பு வராதா?
 குமரி மாவட்டத்தில் தற்போது 3 மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வதற்கு 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
 இந்நிகழ்ச்சியில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மதுசூதனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com