சத்தான உணவு, தரமான சிகிச்சை இல்லை: மதுரை சிறையில் அதிகரிக்கும் கைதிகள் உயிரிழப்பு!

சத்தான உணவு, உரிய சிகிச்சை இல்லாததால் மதுரை மத்திய சிறையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு கைதிகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
சத்தான உணவு, தரமான சிகிச்சை இல்லை: மதுரை சிறையில் அதிகரிக்கும் கைதிகள் உயிரிழப்பு!

மதுரை: சத்தான உணவு, உரிய சிகிச்சை இல்லாததால் மதுரை மத்திய சிறையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு கைதிகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதேநிலை பிற சிறைகளிலும் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
 குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கும் விதமாகவும், அதேநேரத்தில் அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்திக் கொள்வதற்கான இடமாகவும் சிறைச்சாலைகள் அமைந்துள்ளன. ஆனால், எதார்த்த நிலை அவ்வாறு இல்லை என்பதே உண்மை. சிறைகளில் ஆள் பலம், பண பலம், அதிகார பலம் படைத்த கைதிகள் வைத்ததே சட்டம் என்பதாக உள்ளது. பணம் படைத்தவர்களுக்கு சிறைகள் சொர்க்கமாகவும், பணமில்லாதவர்களுக்கு நரகமாகவும் உள்ளன. சிறை நிர்வாகங்களும் அதிகார பலம் படைத்த கைதிகளுக்கு மட்டுமே அனைத்து சலுகைகளையும் வழங்குவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
 சந்தர்ப்ப சூழல் காரணமாக செய்த குற்றத்துக்குத் தண்டனை பெற்றுள்ள சாதாரண கைதிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்கூட சிறையில் அளிக்கப்படுவது இல்லை. மேலும் இவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் கூட உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதும் இல்லை. இதனால் தமிழக சிறைகளில் ஆண்டுதோறும் பல கைதிகள் உரிய சிகிச்சையின்றி உயிரிழக்கின்றனர்.
 மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
 மதுரை மத்திய சிறை, ஆங்கிலேயர் காலத்தில் 1865-ஆம் ஆண்டு 34 ஏக்கரில் அமைக்கப்பட்டது. தற்போது 4 மரண தண்டனை கைதிகள், 236 ஆயுள் கைதிகள், 103 நீண்ட நாள் சிறைக் கைதிகள், 21 குறுகிய கால தண்டனை கைதிகள், 168 விசாரணைக் கைதிகள் உள்பட மொத்தம் 1,168 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
 சிறைக் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்கள், முதல் தலைமைக் காவலர்கள், தலைமைக் காவலர்கள், இரண்டாம் நிலைக் காவலர்கள் உள்பட 223 பேர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
 மத்திய சிறையில் உடல்நலம் பாதிக்கப்படும் சிறைக் கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறை வளாகத்திலேயே மருத்துவமனையும் இயங்கி வருகிறது. சிறையில் 1168 பேர் இருக்கும் நிலையில், சிறை மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் மனநல ஆலோசகர் ஒருவரும் பணியில் உள்ளார். மேல் சிகிச்சை தேவைப்படும் கைதிகளுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாதுகாப்புடன் கூடிய வார்டுகளும் உள்ளன.
 கைதிகளுக்கு வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கோழி இறைச்சி வழங்கப்படுகிறது. இதர நாள்களில் காலை உணவாக அரிசி கஞ்சி, அரிசி உப்புமா, வெண் பொங்கல் போன்றவையும், மதிய உணவாக புளி சாதம், தேங்காய் சாதம், சாம்பார், பொரியல், மோர் போன்றவையும், இரவு உணவாக சாதம், சாம்பார், நிலக்கடலை போன்றவையும் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. 1168 கைதிகளுக்கும் சமையல் செய்யும் பணியில் இரண்டு சமையலர்கள் மட்டுமே உள்ளனர். சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி மற்றும் சிறை வளாகத்தை சுத்தம் செய்ய சுகாதாரப் பணியாளர்கள் இருவர் உள்ளனர்.
 சிறைக் கைதிகளுக்கு உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக ஒவ்வோர் ஆண்டும் அரசு லட்சக்கணக்கில் செலவழிக்கிறது. இருப்பினும் அவை முழுமையாக சென்றடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை சிறையில் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழக்கும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 இதுதொடர்பாக இந்தியன் குரல் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சிறையில் இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை மத்திய சிறையில் கைதிகள் இறப்பு எண்ணிக்கை 2015-இல் 8 ஆக இருந்தது, 2016-இல் 10 ஆகவும், 2017-இல் 16 ஆகவும் உயர்ந்துள்ளது. நிகழ் ஆண்டில் நவம்பர் இறுதி வரை 17 பேர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய சிறையிலேயே கடந்த ஆண்டு கைதி ஒருவர் சக கைதியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. நோய் பாதிப்புக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில்லை என்பதே இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது.
 இதுதொடர்பாக இந்தியன் குரல் அமைப்பு நிர்வாகி மோகன் கூறியது:
 கைதிகள் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும் அது கைதிகளைச் சென்றடைவது இல்லை. உணவு, சிகிச்சை உள்ளிட்ட அனைத்திலும் கைதிகளிடையே பெரும் பாகுபாடு காட்டப்படுகிறது.
 நோயால் பாதிக்கப்படும் கைதிகள் மீது உரிய கவனம் செலுத்துவதில்லை. கைதிகள் பலர் சிறுநீரகக் கோளாறால் உயிரிழக்கின்றனர். அவர்களுக்கு தொடக்க காலத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டால் உயிரைக் காப்பாற்றி இருக்க முடியும்.
 சிறையில் இரவு நேரங்களில் இயற்கை உபாதையைக் கழிக்க முடியாது. அதை அடக்கி வைப்பதன் மூலமாக நோய்த் தொற்றுக்கும் ஏராளமானோர் ஆளாகின்றனர். இவற்றை தட்டிக் கேட்கும் கைதிகள் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிறைக் காவலர்களால் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் புகார்கள் இருந்து வருகின்றன.
 சிறைக்கு நீதிபதிகள், உயர் அதிகாரிகள் வருகையின்போது மட்டும் தரமான உணவு வழங்கப்படுகிறது. சிறைக்கு ஆய்வுக்கு வருபவர்களிடம் கைதிகள் எந்தக் குறையும் தெரிவிக்கக் கூடாது என அச்சுறுத்தப்படுவதாகவும் கைதிகள் கூறுகின்றனர். சத்தான உணவு கிடைக்காதது, நோயால் பாதிக்கப்படும் கைதிகளுக்கு சிகிச்சையின்மை போன்றவைதான் மதுரை சிறையில் கைதிகள் உயிரிழப்பு அதிகரிக்க காரணமாக இருக்கிறது. சிறையில் சிறப்பு முகாம் நடத்தி அனைத்து கைதிகளையும் பரிசோதனைக்கு உள்படுத்தினால், நோய் அறிகுறி இருப்பவர்களைக் கண்டறிய முடியும். எனவே, இப் பிரச்னையில் அரசு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மோகன்.
 - ச. உமாமகேஸ்வரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com