பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பு: 6-ஆவது இடத்தில் தமிழகம்; மகாராஷ்டிரத்தில் 422 பேர்

பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 6-ஆவது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பு: 6-ஆவது இடத்தில் தமிழகம்; மகாராஷ்டிரத்தில் 422 பேர்

பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 6-ஆவது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். பிறமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும்.
 இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 422 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 இதை ஒப்பிடும்போது தமிழகத்தில் நிகழாண்டில் பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பு குறைவாக இருந்தாலும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாகும்.
 பிற மாநிலங்களில் மகாராஷ்டிரத்துக்கு (422 பேர்) அடுத்தபடியாக ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பன்றிக் காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்பு அதிகம்.
 ஹெச்1என்1 மற்றும் ஹெச்2என்3 போன்ற பல்வேறு வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் 7,500-க்கும் மேற்பட்டோர் அந்தக் காய்ச்சலுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 இந்த வகை வைரஸ்கள் இருமல், சளி மூலம் பரவும் என்பதால், பன்றிக் காய்ச்சல் குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் அந்நோயின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அந்த வைரஸ்களை முழுமையாக ஒழிக்க இயலவில்லை.
 இந்நிலையில், மாநில வாரியாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் தொடர்பான மத்திய சுகாதாரத் துறை தரவுகளை ஆய்வு செய்தபோது, நிகழாண்டில் மட்டும் நாடு முழுவதும் அந்த காய்ச்சலுக்கு 971 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
 தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 11 மாதங்களில் 2,463 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
 கடந்த 2012-இல் அதிகபட்சமாக இங்கு 40 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகினர். அதன் பின்னர் நிகழாண்டில்தான் ஏறத்தாழ அதே எண்ணிக்கை நெருங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:
 பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனால், 99 சதவீதம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனர். உடல் நலம் மிகவும் குன்றியிருக்கும் ஒரு சிலரே நோயின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் உயிரிழக்கின்றனர். பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் இறப்பு விகிதம் மிகக் குறைவு.
 மாநிலம் முழுவதும் தற்போது பன்றிக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி? வந்தாலும் குணமடைய என்ன செய்ய வேண்டும்? என்பன தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறோம்.
 சுகாதாரத் துறை சார்பில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com