பாலில் கலப்படம் செய்வோர் மீதான நடவடிக்கை என்ன?: உயர்நீதிமன்றம் கேள்வி உயர்நீதிமன்றம் கேள்வி

பால் கலப்படம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பால் கலப்படத்துக்கு துணை
பாலில் கலப்படம் செய்வோர் மீதான நடவடிக்கை என்ன?: உயர்நீதிமன்றம் கேள்வி உயர்நீதிமன்றம் கேள்வி


பால் கலப்படம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பால் கலப்படத்துக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் கலப்படத்தைத் தடுக்கவே முடியாது என கருத்து தெரிவித்துள்ளது. 
தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயன கலப்பு உள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார். இதனை எதிர்த்து தனியார் பால் நிறுவனங்கள் சார்பில் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்தன.
இந்த நிலையில் வழக்குரைஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில், பால்வளத்துறை அமைச்சரே தனியார் பால் நிறுவனங்களின் பாலில் கலப்படம் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். தனியார் பால் நிறுவனங்கள் பெரும்பாலும் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளன. எனவே இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பொது சுகாதாரத்துறை இயக்குநர் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் பாலில் கலப்பட விவகாரம் தொடர்பாக 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.18 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இதனைப் படித்து பார்த்த நீதிபதிகள், பால் கலப்படம் செய்தவர்களுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும் அறிக்கையில், 42 பால் மாதிரிகளை மட்டுமே ஆய்வு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பால் விற்பனைக்கு எத்தனை பேர் உரிமை பெற்றுள்ளனர், பால் கலப்படம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, விசாரணை முடிந்த வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள் என்ன, இந்த விவகாரத்தில் இதுவரை எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, இதுதொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும் கலப்படம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். கடுமையான தண்டனை வழங்காவிட்டால் கலப்படத்தைத் தடுக்கவே முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை வரும் ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com