புயல் பாதிப்பு அறிக்கை தாமதத்துக்கு தமிழக அரசே காரணம்: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு தொடர்பான இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தாமதமாவதற்கு மாநில அரசே காரணம் என மத்திய அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற


தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு தொடர்பான இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தாமதமாவதற்கு மாநில அரசே காரணம் என மத்திய அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஸ்டாலின், ராமநாதபுரம் திருமுருகன், புதுக்கோட்டை மாவட்டம் புலியூர் செல்வராஜூ, திருச்சி தங்கவேல் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். 
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் பல்வேறு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்து விசாரணையை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில், நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பு நிவாரணங்களுக்காக விண்ணப்பிக்க ஒரு வாரம் கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
மேலும் மத்திய குழுவின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் ஆகும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மத்தியக் குழுவின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு தமிழக அரசிடம் சில விளக்கங்கள் கோரப்பட்டது. அதற்கு தமிழக அரசு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் புயல் பாதிப்பு இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காலதாமதம் ஏற்படுகிறது என்றார்.
அதற்கு தமிழக அரசுத்தரப்பில், மத்தியக்குழு கோரியிருந்த விளக்கங்களுக்கு இன்று பதில் அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேத மதிப்பு தொடர்பான மத்தியக் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் ஆகும்? என்று மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு மத்திய அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com