ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் திமுகவில் இணைந்தேன்: செந்தில் பாலாஜி பேட்டி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் திமுகவில் இணைந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் சிறந்த தலைவராக ஸ்டாலினை பார்ப்பதாகவும்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்த  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்த  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் திமுகவில் இணைந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் சிறந்த தலைவராக ஸ்டாலினை பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விலகி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.
 வெள்ளிக்கிழமை பகல் 12.05 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வந்த செந்தில் பாலாஜி,  மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி திமுகவில் சேர்ந்தார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் படிவத்திலும் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.  அதன் பின், சுமார் 50 நிமிஷங்களுக்கு மேலாக அரசியல் விவகாரங்கள் குறித்து  ஸ்டாலினுடன் ஆலோசித்தார். திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா உள்பட முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓர் இயக்கத்தில் (அமமுக) பொறுப்பேற்று செயல்பட்டு வந்தேன். மு.க.ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் திமுகவின் அடிப்படை உறுப்பினராகி உள்ளேன். தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் சிறந்த தலைவராக மு.க.ஸ்டாலினைப் பார்க்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி, தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்கும் மக்கள் விரோத அரசாக உள்ளது. மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது.
ஆனால், தமிழக உரிமைகளை மீட்டெடுக்க மு.க.ஸ்டாலின் போராடி வருகிறார்.  அவரது கரத்தை வலுப்படுத்துவதற்காகவே திமுகவில் இணைந்தேன்.
இருள் அகற்றி ஒளி தருவது சூரியன். என் மனதில் இருந்த இருளை அகற்றி எனக்கு புதிய வழியைத் திமுக தந்துள்ளது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் இபிஎஸ், ஓபிஎஸ் மக்கள் விரோத ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்.  தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவது உறுதி.
டிடிவி தினகரனுடன் என்ன கருத்து வேறுபாடு எனக் கேட்கிறீர்கள். ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டு வந்துள்ளோம். அந்த தலைமை குறித்து பேசுவது சரியான மரபாக, நாகரிகமாக இருக்காது. திமுகவில் நான் இணைந்தது அந்தத் தலைமைக்கு (டிடிவி தினகரன்) ஆச்சரியமாக இருக்கலாம். 
நவம்பர் 14-ஆம் தேதி தருமபுரியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்தான் அந்தத் தலைமையை கடைசியாகச் சந்தித்தேன். அதன் பிறகு ஒரு மாதமாக எந்தக் களப் பணியிலும் பங்கேற்கவில்லை.
கரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி திமுகவில் இணைந்துள்ளேன்.
மேல்முறையீடு தேவையில்லை: 18 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததும் மேல்முறையீடு வேண்டாம் என்று முதலில் கூறியது நான்தான். மேலும்  மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு வருவதற்கு காலதாமதம் ஆகும். அதனால் வேண்டாம். தேர்தலைச் சந்தித்து, வெற்றிபெற்று ஆட்சியைக் கவிழச் செய்வோம் என்றும் வலியுறுத்தினேன்.
டிடிவி தினகரன் தொடர்பான கேள்விகளுக்கு வேறொரு சந்தர்ப்பத்தில்  பதில் அளிக்கிறேன்.
கரூர் மாவட்டத்தில் திமுகவில் ஏற்கெனவே முக்கிய நிர்வாகிகள் உள்ளனர். அவர்களோடு இணைந்து பணியாற்றுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை.  தொண்டர்களை அரவணைத்துச் செல்பவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் வந்தால் யார் போட்டியிட்டாலும் துணைநிற்பேன். ஒருவேளை ஸ்டாலின் விரும்பினால் அத்தொகுதியில் போட்டியிடத் தயாராக இருக்கிறேன் என்றார். 
அரசியல் பயணம்: கரூரில் 2 முறை ஒன்றியக் கவுன்சிலராக நின்று வெற்றிபெற்றுள்ளார். முதல் முறை சுயேச்சையாகப் போட்டியிட்டுள்ளார். அதன்பிறகு அதிமுகவில் இணைந்து செயல்பட்டார். 2006, 2011-இல் கரூர் தொகுதியிலிருந்தும், 2016-இல் அரவக்குறிச்சி தொகுதியிலிருந்தும் வெற்றிபெற்றார். 2011-ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுகள் போக்குவரத்துத் துறை அமைச்சராகச் செயல்பட்டுள்ளார். 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில்  செந்தில்பாலாஜியும் ஒருவர்.  அதைத் தொடர்ந்து தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com