கபாலீஸ்வர் கோயில் சிலை விவகாரம்: அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது

மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை
கபாலீஸ்வர் கோயில் சிலை விவகாரம்: அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர். 

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோயிலில், கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்னதாக திருப்பணிகள் செய்யப்பட்டன. அப்போது, புன்னைவன நாதர் சந்நிதியில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டு வேறு சிலை வைக்கப்பட்டதாகவும், ராகு, கேது சிலைகள் மாயமானதாக புகார் எழுந்தது. 

இதையடுத்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் 3 அதிகாரிகள் குழு இரண்டு நாளாக ஆய்வில் ஈடுபட்டு வந்தது. 

இதனிடையே, 2004-ஆம் ஆண்டில் கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்தவரும் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக உள்ளவருமான திருமகளின் வியாசர்பாடி வீட்டில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், கடந்த அக்டோபர் மாதம் சோதனையில் ஈடுபட்டதுடன், சிலைகள் மாற்றப்பட்ட விவகாரம் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தினர். சிலைகள் மாற்றப்பட்ட விவகாரத்தில் திருமகள் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியானது. 

இதனையடுத்து திருமகள் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.  

இதைத்தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட திருமகளிடம் விசாரணை நடத்த, வியாசர்பாடியில் உள்ள, அவரது வீட்டிற்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சென்ற போது, அவர் தலைமறைவானர். அவரை கைது செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர். 

இந்நிலையில், இன்று சென்னையில் திருமகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர். 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாயமானது தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டது நிரூபணமானால், இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com