வெல்லம்-பருத்தி விதையுடன் சிறப்பு உணவு; நீச்சல் - நடைப்பயிற்சி: ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க காளைகளும் - காளையர்களும் தயாராகி வருகின்றனர்.
வெல்லம்-பருத்தி விதையுடன் சிறப்பு உணவு; நீச்சல் - நடைப்பயிற்சி: ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்


மதுரை: பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க காளைகளும் - காளையர்களும் தயாராகி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வெகுவிமரிசையாக நடைபெறும். இதில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது. பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் தினத்தன்று பாலமேட்டிலும்,  மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
உலகின் கவனத்தை ஈர்த்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நடைபெற்ற ஜல்லிக்கட்டு அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது. 
நிகழாண்டில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு முன் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
காளை வளர்ப்போரும், காளையர்களும் ஜல்லிக்கட்டுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலான கிராமங்களில் வாடிவாசல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, இளைஞர்கள் காளைகளுக்குப் பயிற்சி அளிக்கின்றனர். அதேநேரத்தில், மாடுபிடி வீரர்களாகக் களம் இறங்க உள்ளோரும், அந்த காளைகளை அடக்குவதற்கான பயிற்சியைப் பெறுகின்றனர். 
கிராமங்களில் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு, எப்போதும் சிறப்பு மரியாதை இருக்கும். அதிலும் ஜல்லிக்கட்டு நெருங்கிவிட்டால் அவற்றுக்கு உணவில் தொடங்கி அனைத்திலும் சிறப்பு கவனிப்பு இருக்கும். 
இதுபற்றி ஜல்லிக்கட்டுக்காக காளைகளைத் தயார்படுத்தி வரும் மதுரை ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.துரைப்பாண்டி கூறியது:
எனது சகோதாரர்களிடம் இரு ஜல்லிக்கட்டுக் காளைகள் உள்ளன. இவற்றுக்கு நானும் எனது நண்பர்களும்  பயிற்சி அளித்து வருகிறோம். 
ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து வெளியேறும்போது எடுக்கும் வேகம் தான், மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் வருவதற்கு உதவும். இதற்கு மூச்சுப் பயிற்சி அவசியம். ஆகவே, 2 நாள்களுக்கு ஒருமுறை காளைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிப்போம். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி அளிக்கப்படும்.
ஜல்லிக்கட்டில் வாடிவாசல் முன்பு மாடுபிடி வீரர்கள் கும்பலாக இருப்பர். அவர்களை மிரட்டும் காளைகள் தான் பிடிபடாமல் செல்லும். 
அதற்காக, வாடிவாசல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி ஆக்ரோஷமாக வெளியேறுவதற்கு காளைகளை பயிற்சியில் ஈடுபடுத்துகிறோம். 
மாடுபிடி வீரர்களை மிரட்டி சீறிப் பாய்ந்து செல்வதற்கும், திமிலை அடக்க வரும்போது உடலை லாவகமாகத் திருப்பி பாய்வது போலச் செல்லவும் காளைகளுக்கு மண்ணைக் குத்தும் பயிற்சி தரப்படுகிறது. 
ஜல்லிக்கட்டு நேரத்தில் அவற்றுக்கு அளிக்கப்படும் உணவுகள் மிகவும் முக்கியமானவை. தவிடு, உளுந்து, சிவப்பு துவரை, பட்டாணி என  ஊறவைத்து வழங்கப்படும். தினமும் இரவு நேரத்தில் பருத்தி விதையை ஊற வைத்து அதில் வெல்லம் கலந்து கொடுப்போம். 
உடல் திடகாத்திரமாக இருக்கவும், கால்கள் நன்றாக வலுப்பெறவும் இந்த உணவு வகை அளிக்கப்படும். 
தற்போது எங்களது கிராமத்தில் உள்ள 15 காளைகளுக்கு தினமும் பயிற்சி அளித்து வருகிறோம் என்றார்.

காளையர்களுக்கும் பயிற்சி

காளைகளைப் போலவே காளையர்களும் ஜல்லிக்கட்டுக்குத் தயாராகி வருகின்றனர். மூத்த மாடு பிடி வீரர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக பயிற்சி அளித்து வருகின்றனர். வாடிவாசலில் இருந்து வரும் காளை, எந்த திசையில் திரும்புகிறது என்பதைக் கவனித்து அதை அடக்குவது, ஒவ்வொரு காளைக்கும் தனித்தன்மையை வாடிவாசலில் இருந்து வெளியேறும்போதே கணித்து அதற்கேற்ப திமிலைப் பிடித்து அடக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

வாடிவாசலைப் போல அமைப்பை ஏற்படுத்தி காளைகளுக்கு பயிற்சி அளிப்பதைபோல, ஜல்லிக்கட்டுக்கு செல்லாத சிறிய காளைகளை வைத்து மாடுபிடி வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர். "காளைகளைப் போல சிறப்பு உணவு பிரத்யேகமாக எடுத்துக் கொள்வதில்லை. வழக்கமான உணவு தான். தினமும் நீச்சல் பயிற்சி எடுப்பது சுறுசுறுப்பாக இருக்க உதவியாக இருக்கும்' என்கின்றனர் மாடு பிடி வீரர்கள்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டுகோள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு கடந்த ஆண்டு காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் அழைத்துவரப்பட்ட போதிலும், 700 காளைகள் மட்டுமே அவிழ்த்துவிட முடிந்தது. நிகழாண்டில் மாலை 5 மணி வரை அனுமதி அளிக்குமாறு விழாக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக் குழுவைச் சேர்ந்த சுந்தரராஜன் கூறியது:

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் அதிகளவில் வருவதால்,  மாவட்ட நிர்வாகம் வழங்கும் கால அவகாசம் போதுமானதாக இல்லை. எனவே, ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com