ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட்  ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணையும், வாதங்களும் கடந்த 10-ஆம் தேதி நிறைவடைந்தன. இதையடுத்து, மனு மீதான  உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஏ.கே.கோயல் தெரிவித்திருந்தார்.

மீண்டும் திறக்க அனுமதி: அதன்படி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அதன் இணையதளத்தில் சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு,  குடிநீர் சட்டத்தின்படி தன்னிச்சையானது அல்ல. ஆலை தொடர்ந்து இயங்குவதற்கு இசைவு மறுத்தது, ஆலையை மூட உத்தரவிட்டது போன்ற  தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கருத்தை தமிழக அரசு வழிமொழிந்துள்ளது. இது மட்டுமே போதுமான காரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.  தமிழக அரசின் உத்தரவு சட்டப்படி தீர்ப்பாயத்தின் ஆய்வுக்கு உள்பட்டதாகும். 

இதேபோல, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கருத்தைக் கேட்காமல் நிலத்தடி நீர் மாசுபாடு காரணத்தை காட்டி  ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டதில் எவ்வித அடிப்படையும் இல்லை. தாமிரக் கழிவுகளைப் பொருத்தவரை அவை அபாயமானது இல்லை என்றும், நீரின் போக்கை தடுப்பதாக இல்லை என்றும் நீதிபதி தருண் அகர்வால் குழு தெரிவித்துள்ளது. எனவே, தாமிரக் கழிவுகளைச் சுற்றி சுவர் போன்ற தடுப்புகளை எழுப்பலாம். இதற்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு வாய்ப்பு வழங்காமல், ஆலை இயங்குவதற்கு அனுமதி மறுத்ததையும், ஆலைக்கு சீல் வைத்ததையும் நியாயப்படுத்த முடியாது. 

"ஆதாரம் இல்லை': ஸ்டெர்லைட் ஆலை காற்று தர விதிகளை மீறியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் புகாருக்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. தூத்துக்குடி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட குடிநீரில் மொத்தம் கரைந்துள்ள திடப்பொருள்கள் (டிடிஎஸ்)  அளவு 4,000 ஆக  உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டால், அதுவே சுற்றுச்சூழலுக்கு மீளவொண்ணாத மாசு ஏற்பட்டுள்ளது என்பதற்கும், உடல்நலத்தைப் பாதிக்கும் என்பதற்கும் ஆதாரமாகக் கொள்ள முடியாது. மாசுத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ஆலை இயங்குவதற்கு இசைவு மறுக்கப்பட்டதும், மூடியதும் சட்டவிரோதமானது.

சுற்றுச்சூழல் மாசு குறித்த புகார்களைத் தெரிவிக்கவும், அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்து  அறிந்து கொள்ளவும் வேதாந்தா குழுமம்  இணையதளத்தை உருவாக்க வேண்டும்.  மேலும்,  நிலத்தடி நீரைத் தொடர்ந்து கண்காணித்து அது தொடர்பான புள்ளிவிவரங்களை அந்த இணையதளத்தில் வேதாந்தா குழுமம் பதிவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் ஒருமுறைக்கு ரூ. 10 லட்சம் அபராதத்தை  மாவட்ட சட்ட சேவைகள் அதிகார சபையிடம் அந்த நிறுவனம் செலுத்த வேண்டும்.

பட்டா நிலத்தில் 3.5 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்குத் தாமிரக் கழிவுகளைச் சரிவரக் கையாளாத வேதாந்தா குழுமம்,  ரூ. 2.5 கோடியை மாநில சட்ட சேவைகள் அதிகார சபையிடம் செலுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் விபத்து ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில், போதுமான ஆபத்துகாலத் தடுப்புப்  பயிற்சிகளை அந்த நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் உருவாக்க வேண்டும்.  பொதுமக்களின்  பாதுகாப்பு குறித்து தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை தூத்துக்குடி ஆட்சியர் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.

தூத்துக்குடியில்  குடிநீர் விநியோகம், மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட வசதிகளுக்காக 3 ஆண்டுகளில் ரூ.100 கோடியை முதலீடு செய்ய விரும்புவதாக வேதாந்தா குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிதி பயன்பாட்டுக்கான செயல்திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அனுமதி அளித்து, தொடர் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். 

உத்தரவு ரத்து: இதன்படி,  வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை தேசிய பசுமைத் தீர்ப்பாயம்  ஏற்றுக் கொள்கிறது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு  தமிழக அரசு கடந்த மே 28 -ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 

மேலும்,  இன்றிலிருந்து 3 வாரங்களுக்குள் ஆலை செயல்படுவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை கூறியது:
பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட்  ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.  இதை எதிர்த்து ஆலை  உரிமையாளர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  அந்தத்  தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com