குறைந்து வரும் தேர்ச்சி விகிதம்; அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை: பி.இ. மாணவர் சேர்க்கை தகுதி மதிப்பெண் உயர்த்தப்படுமா?

பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களை தரமான பொறியாளர்களாகவும், வேலைவாய்ப்புத் திறன்மிக்கவர்களாகவும் உருவாக்க, பி.இ. மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்ணை உயர்த்த வேண்டும்
குறைந்து வரும் தேர்ச்சி விகிதம்; அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை: பி.இ. மாணவர் சேர்க்கை தகுதி மதிப்பெண் உயர்த்தப்படுமா?

பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களை தரமான பொறியாளர்களாகவும், வேலைவாய்ப்புத் திறன்மிக்கவர்களாகவும் உருவாக்க, பி.இ. மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்ணை உயர்த்த வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 500 -க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் பி.இ. முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்டது. இதில் 31.93 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இது கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நிகழாண்டு மட்டுமல்ல; ஒவ்வொரு ஆண்டும் இதே அளவில்தான் முதலாமாண்டு மாணவர் தேர்ச்சி விகிதம் உள்ளது. பெரும்பாலும் கணிதம், இயற்பியல் பாடங்களிலேயே மாணவர்கள் தோல்வியடைகின்றனர். இதற்கென அண்ணா பல்கலைக்கழகமும், இணைப்புக் கல்லூரிகளும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை அளித்து வருகின்றபோதும், தேர்ச்சி விகித்தில் முன்னேற்றமில்லை என்கின்றனர் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.
ஏஐசிடிஇ புள்ளி விவரம்: இந்த நிலையில்,பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தரும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, தமிழக்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பி.இ. பட்டதாரிகள் வேலைவாய்ப்பைப் பெறாமல் இருப்பது தெரிய வருகிறது.
கடந்த 2014 -இல் பொறியியல் படிப்புகளில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 520 மாணவ -மாணவிகள் சேர்ந்துள்ளனர். இவர்களில் தேர்ச்சி பெற்றவர்களில் வளாகத் தேர்வு உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம் 79 ஆயிரத்து 709 பேர் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். 81,811 பேர் வேலைவாய்ப்பைப் பெறவில்லை.
இதேபோல் 2015 -இல் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 941 பேர்களில், 88,629 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். 2016 -ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 20 பேர் பி.இ. படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அவர்களில் 83,294 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு முதல் நல்ல மதிப்பெண் தேவை: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு வேலைவாய்ப்பை தருவதற்கான வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்கள், பொறியியல் மாணவர்களிடம் தொழில்நுட்ப அறிவு அபாரமாக இருக்கிறதா என்பதை எதிர்பார்ப்பதில்லை. மாறாக, மாணவர்கள் பத்தாம் வகுப்பு முதல் நல்ல மதிப்பெண் 
பெற்றிருக்கின்றனரா என்றும், பொறியியல் படிப்பை அரியர் இல்லாமல் தேர்ச்சி பெற்றிருக்கின்றனரா என்பதைத்தான் முதலில் எதிர்பார்க்கின்றனர். 
இதன் காரணமாகவே, வளாக தேர்வில் வேலைவாய்ப்பைப் பெற முடியாமல் போகும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது எனஅண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது:
பிளஸ் -2 பொதுத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்கள், வேறு படிப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், பி.இ. படிப்பில் சேர்ந்து விடலாம் என்ற நிலைதான் இன்றைக்கு உள்ளது. நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் இன்றைக்கு பி.எஸ்சி. கணிதம் அல்லது பி.எஸ்சி. இயற்பியல் படிப்புகளில் சேர்ந்து விடுகின்றனர். 40 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்கள்தான் பி.இ. படிக்க வருகின்றனர்.
எனவே, பொறியியல் மாணவர் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், தரமான பொறியாளர்களை உருவாக்கவும் பி.இ. மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை 50 சதவீதமா க உயர்த்த வேண்டும். மேலும், பொறியில் கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அத்துடன், பொறியியல் சேர்க்கைக்கு மீண்டும் நுழைவுத் தேர்வைக் கொண்டுவர வேண்டும். இந்த மாற்றங்களைச் செய்யாதவரை தேர்ச்சி விகிதம் உயராது என்றார் அவர்.
60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்: கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், 'இன்றைக்கு பாடத் திட்டத்துக்கும், நிறுவனங்களின் தேவைக்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது. எனவே, பி.இ. மாணவர்களுக்கு சுயமாக கற்கும் திறன் மிக அவசியம். பள்ளிப் பருவம் முதல் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களால் தான் அது இயலும்.
எனவே, பி.இ. சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்ணை உயர்த்துவது மிக அவசியம். தமிழகத்தில் முன்பு பி.இ. சேர்க்கை பெற எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பிளஸ் -2 பொதுத் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடனும், பொதுப் பிரிவு உள்ளிட்ட பிற பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டிருப்பது.
ஆனால், தற்போது தகுதி மதிப்பெண்எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 40 சதவீதம், பி.சி. 45 சதவீதம், பொதுப் பிரிவினருக்கு 50 சதவீத தேர்ச்சி என்ற அளவில்தான் உள்ளது. இதை மீண்டும் முன்பிருந்தது போல உயர்த்த வேண்டும். அப்போதுதான் தரமான பொறியாளர்களை உருவாக்க முடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com