துணை சுகாதார நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது: ஜி.கே. வாசன்

துணை சுகாதார நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
துணை சுகாதார நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது: ஜி.கே. வாசன்

துணை சுகாதார நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
மத்திய அரசு - மக்களுக்கு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளில் நேரடியாக ஈடுபட்டு, முழுமையாக நிறைவேற்றினால் தான் மக்கள் நலன் சார்ந்த அரசாக இருக்கும். அதன் அடிப்படையில் சுகாதாரத்துறையில் அரசின் கவனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

குறிப்பாக நாடு முழுவதும் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்ற சுகாதார நிலையங்கள் அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது. அந்த வகையில் நம் நாடு முழுவதும் 1 இலட்சத்து 56 ஆயிரத்து 708 துணை சுகாதார நிலையங்கள் அரசாங்கத்தால் இயக்கப்படுகின்றன. அதாவது 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் வீதம் உள்ளது. அதே போல மலைப் பகுதிகளில் 3 ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் உள்ளது.

இந்த துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் புறநோயாளிகளை சோதித்து நோய்தடுப்பு முறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோரை உயர் மருத்துவ மையங்களுக்கு அனுப்பி வைத்தல் போன்ற முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் இம்மையங்களின் மூலம் மருத்துவம் சம்பந்தமான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

உதாரணத்திற்கு கர்ப்பிணிப் பெண்களுக்கும், மகப்பேறு காலத்தில் உள்ள பெண்களுக்கும், மகப்பேறுக்குப் பிந்தைய நிலையில் உள்ள பெண்களுக்கும் மருத்துவம் தொடர்பான உதவிகள் துணை சுகாதார நிலையங்களின் மூலம் வழங்கப்படுகின்றன. மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுத்தல், தேசிய அளவிலான பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற பணிகள் துணை சுகாதார நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

மொத்தத்தில் துணை சுகாதார நிலையங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல இன்றியமையாத ஒன்றாகவும் அமைகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த துணை சுகாதார நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் அரசின் கட்டுப்பாட்டில் இயக்கப்படுகின்ற சுகாதர நிலையங்களில் ஏதேனும் குறை இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்து மக்களுக்கான சேவையை குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கான சேவையை தொடர வேண்டுமே தவிற அதை விட்டு விட்டு தனியார் வசம் ஒப்படைக்க முன்வந்தால் அது முற்றிலும் தவறானது.

மத்திய பா.ஜ.க. அரசு நடப்பாண்டிற்கான (2018- 19) நிதிநிலை அறிக்கையில் துணை சுகாதார நிலையங்களை சுகாதார மற்றும் நல மையங்களாக மாற்ற நிதி ஒதுக்கியுள்ளது. நிதி ஒதுக்கியதன் மூலம் ஏற்கனவே அரசின் கட்டுப்பாட்டில் இயக்கப்படுகின்ற சுகாதார நிலையங்களின் தரம் மேலும் உயர்த்தப்பட்டு மக்களுக்கான சேவையை இன்னும் அதிகப்படுத்திட அரசே நேரடி கண்காணிப்பில் இயக்க வேண்டும். எனவே துணை சுகாதார நிலையங்களை
கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் மற்றும் பிற தனியார் அமைப்புகளிடமும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ஏற்புடையதல்ல.

காரணம் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மக்களுக்கு நேரடியாக மருத்துவ சேவையை இலவசமாக செய்து வருகின்ற துணை சுகாதார நிலையங்களை தனியார் வசம் ஒப்படைத்தால் தரமான சிகிச்சை முறைகள் முழுமையாக, இலவசமாக கிடைக்க முடியாமல் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உட்படுவார்கள். 

எனவே நாடு முழுவதும் உள்ள சுமார் 1.55 இலட்சம் துணை சுகாதார நிலையங்களை தனியாரிடம் வழங்கினால் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை மத்திய பா.ஜ.க. அரசு கவனத்தில் கொண்டு இம்முடிவை திரும்ப பெற வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com