மணல் லாரி உரிமையாளரை மிரட்டி லஞ்சம்: ஆம்பூர் டி.எஸ்.பி., எஸ்.ஐ. கைது

மணல் லாரி உரிமையாளரை மிரட்டி லஞ்சம் வாங்கியதாக ஆம்பூர் டி.எஸ்.பி. மற்றும் எஸ்.ஐ. ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி. தனராஜன், எஸ்.ஐ .லூர்து ஜெயராஜ்.
கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி. தனராஜன், எஸ்.ஐ .லூர்து ஜெயராஜ்.

மணல் லாரி உரிமையாளரை மிரட்டி லஞ்சம் வாங்கியதாக ஆம்பூர் டி.எஸ்.பி. மற்றும் எஸ்.ஐ. ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வருபவர் ப.தனராஜன் (54). இவர், ஏற்கெனவே விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கலால் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து இடமாறுதலில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆம்பூர் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (41) அரசு மணல் குவாரியில் அனுமதி பெற்று லாரிகள் மூலம் மணல் அள்ளி விற்பனை செய்து வந்தார். தற்போது அரசு மணல் குவாரிகள் இல்லாததால் செங்கல்சூளை நடத்தி வருகிறார். 
பன்னீர்செல்வத்தை ஆம்பூர் டி.எஸ்.பி. தனராஜன் அழைத்து செங்கல் சூளைக்கு லாரியில் மண் எடுத்துச் செல்வதற்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தரவில்லையெனில் செங்கல் சூளைக்கு லாரி இயக்க முடியாதவாறு லாரியைப் பிடித்து பறிமுதல் செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்காக ஆம்பூர் நகர எஸ்.ஐ. லூர்து ஜெயராஜ் (51) மூலம் பேரம் பேசி டி.எஸ்.பி. தனராஜனுக்கு ரூ.1.20 லட்சமும், எஸ்.ஐ. லூர்து ஜெயராஜுக்கு ரூ. 25 ஆயிரம் பணம் தர வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து பன்னீர்செல்வம் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை பன்னீர்செல்வத்திடம் கொடுத்து அனுப்பினர்.
இதையடுத்து பன்னீர்செல்வத்திடம் ஆம்பூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் எஸ்.ஐ. லூர்து ஜெயராஜ் ரூ. 25 ஆயிரம் பணம் வாங்கிய போது, காரில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி பாலசுப்பிரமணி தலைமையிலான போலீஸார் அவரை அங்கே கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் ஆம்பூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. தனராஜனிடம் ரூ. 1.20 லட்சம் பணம் கொடுத்த போது, வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட எஸ்.ஐ. லூர்து ஜெயராஜ் வேலூரைச் சேர்ந்தவர். டி.எஸ்.பி. தனராஜன் தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டம், ஆபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்: டி.எஸ்.பி. தனராஜன் கைது செய்யப்பட்டதை அறிந்த ஆம்பூர் பகுதி பொதுமக்கள் டி.எஸ்.பி. அலுவலகம் முன் அவருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். பொதுமக்கள் புகார் அளிக்க சென்றால் மதிப்பதில்லை, அரசியல் பிரமுகர்கள் சென்றால் அவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதாக குற்றம்சாட்டினர்.
மேலும், டி.எஸ்.பி.யால் பாதிக்கப்பட்ட வழக்குரைஞர்கள், பொதுமக்கள் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரிலேயே பட்டாசு வெடித்து கொண்டாடினர். 
ஏராளமான குற்றச்சாட்டு, 
புகார்கள்: ஆம்பூர் காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட பாலாறு பகுதிகளில் மாட்டு வண்டிகள், லாரிகள் மூலம் மணல் கடத்தி விற்பனை செய்வதற்கும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை, காட்டன் சூதாட்டம் நடத்துவதற்கு மாதந்தோறும் பணம் தர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி பணம் வாங்கியுள்ளார். 
இதுதவிர, அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை தர வேண்டும் எனக் கேட்டு வாங்கியுள்ளதாக டி.எஸ்.பி. தனராஜன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், புகார்களும் எழுந்துள்ளன. அதோடு மட்டுமல்லாமல் கள்ளச் சாராய வியாபாரிகளுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com