மாநில உரிமைகளில் தமிழக அரசுக்கு கவலையில்லை: இரா. முத்தரசன்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுவதைப் பற்றி தமிழக அரசு கவலைப்படுவதில்லை என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுவதைப் பற்றி தமிழக அரசு கவலைப்படுவதில்லை என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
திருவாரூர் மாவட்டம், பேரளத்தில் 2 நாள்கள் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டின் நிறைவு நாளான வியாழக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்ற இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆண்டாள் குறித்து வைரமுத்து தெரிவித்த கருத்துக்கு உரிய விளக்கம் அளித்து, தனது கருத்து யாருடைய மனதையும் புண்படுத்துமானால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறிய பிறகும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, மதரீதியான கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற நினைக்கும் வகுப்புவாத சக்திகளின் முயற்சியே ஆகும். இந்த முயற்சியை மக்கள் ஒன்றிணைந்து முறியடிப்பர்.
ஓபிஎஸ் தர்மயுத்தம் முடிந்து விட்டது என தெரிவித்திருக்கிறார். எதற்கு தர்ம யுத்தம் தொடங்கினார், அந்த தர்ம யுத்தத்தில் என்ன பிரச்னைகளை முன் வைத்தார், அந்த பிரச்னைகளில் எது தீர்ந்து இருக்கிறது. எனவே, தர்ம யுத்தம் தொடங்கினேன் என்பதும், அது முடிந்து விட்டது என்பதும் வெறும் கபட நாடகமாகும்.
தமிழகத்தில் ஊழல் மிகப்பெரும் அளவில் நடைபெற்று வருகிறது. பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி பல கோடி பணம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல, அனைத்து துறைகளிலும் பணிகளில் நியமிக்கப்படுவோர் தேர்வு வைக்கப்பட்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம் ரூ.3 முதல் 4 லட்சம் வரை பணம் பெறப்பட்டு வருகிறது. 
ஆந்திர மாநில அரசு தங்கள் மாநில மக்களுக்கு மத்திய அரசிடம் பல்வேறு நிதிகள் குறித்து போராடி வருகிறது. சிறப்பு நிதிகளைப் பெறுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபடுவார்கள் எனமுதல்வர் சந்திரபாபுநாயுடு கூறுகிறார். 
ஆனால், தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுகிறது, நிதிகள் குறைக்கப்படுகின்றன. ஆனால், எடப்பாடி அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com