மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல தடை: உயர்நீதிமன்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் செல்லிடப்பேசிகளை எடுத்துச் செல்ல தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல தடை: உயர்நீதிமன்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் செல்லிடப்பேசிகளை எடுத்துச் செல்ல தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த 2-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் கோயிலுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உத்தரவிடக்கோரி மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த எஸ்.முத்துக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அவரது மனு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள் பூஜைப் பொருள்கள் விற்பதற்கென 115 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் அங்கு 400-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பிளாஸ்டிக், துணி பொம்மைகள், வாசனைத் திரவியங்கள், பேட்டரியில் இயங்கும் விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் விற்கப்பட்டன. சமீபத்தில் நடைபெற்ற தீ விபத்துக்கு இதுவே காரணம்.
கோயிலுக்கு உச்சகட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று 2009-இல் தமிழக அரசிடம் மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை புனரமைத்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் தொல்லியல் துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு அமைக்கவும், தீ விபத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வடமாநிலங்களில் கோட்டைகளையும், அரண்மனைகளையும் மட்டுமே பார்க்க முடியும். ஆனால், தென் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே கோயில்களை அரசர்கள் அதிகளவில் கட்டினர். ஆனால், அவை தற்போது பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளன. கோயிலில் தீ விபத்து நடைபெற்ற போது தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததும், தீத்தடுப்பு உபகரணங்களைக் கையாளப் பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாததுமே தீ வேகமாகப் பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. கோயிலில் தீ விபத்து ஏற்பட்டு புராதனச் சின்னங்கள் அழிவதை சாதாரணமாக கருத முடியாது என்றனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கோயிலின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகளைத் தவிர பக்தர்களோ, பார்வையாளர்களோ கோயிலுக்குள் செல்லிடப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளைக் கண்காணிக்க மத்திய தொல்லியல்துறை அடங்கிய உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
வடமாநிலங்களில் உள்ள முக்கியக் கோயில்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இதுபோல மீனாட்சியம்மன் கோயில் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, கோயில் பாதுகாப்புப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்துவது தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு உதவி கோரலாம்.
கோயில் வளாகத்தில் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட வேண்டும். தீ விபத்துகள் ஏற்படும்போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோயில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவது அவசியம். கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களின் திறன் அதிகப்படுத்தப்பட வேண்டும். கோயில் சுற்றுச்சுவரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையில் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடங்கள் இருந்தால் அவற்றுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி இடிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பான அறிக்கையை தமிழக அரசு மார்ச் 12-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com