ரூ.1.8 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: துப்புரவு பணியாளர் உள்பட 3 பேர் கைது

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 1.8 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கத்தை, திருச்சியில் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் (டி.ஆர்.ஐ) வியாழக்கிழமை இரவு பறிம

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 1.8 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கத்தை, திருச்சியில் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் (டி.ஆர்.ஐ) வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விமான நிலைய துப்புரவு பணியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் திருச்சியில் பதுக்கி வைத்திருப்பதாக டிஆர்ஐ போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கடந்த இரு தினங்களாக திருச்சியில் முகாமிட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஹாஜிமுகமது என்பவர் வந்த காரில் சோதனை நடத்தினர். அப்போது, அவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் விமான நிலையப் பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் தங்கக் கட்டிகள் இருப்பதாகவும், அதனை பெற்றுச்செல்ல திருச்சி வந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் அவருடன் குண்டூர் பகுதிக்குச் சென்றனர். அங்கிருந்த ஒரு வீட்டை ஹாஜிமுகமது அடையாளம் காட்டினார். அந்த வீட்டில் அங்கமுத்து என்பவர் இருந்துள்ளார். இதையடுத்து வீட்டில் சோதனையிட்டபோது தலா ஒரு கிலோ எடையுள்ள 6 கடத்தல் தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அங்கமுத்துவிடம் விசாரணை நடத்தினர்.
கழிவறையில் தங்கக் கட்டிகள்: அவர்அளித்த தகவலின்படி, விமான நிலையத்தில் துப்புரவு ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் லாரன்ஸ் (28) என்பவர், வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் தங்கக் கட்டிகளை, கடத்தல் ஆசாமிகள் விமான நிலைய கழிவறையில் வைத்துவிட்டுச் செல்வார்களாம். பின்னர் துப்புரவு பணி செய்வதுபோல கழிவறைக்குள் செல்லும் லாரன்ஸ், அவற்றை வெளியே எடுத்து வந்து அங்கமுத்துவிடம் கொடுப்பதும், அவர் ஹாஜிமுகமதுவிடம் கொடுத்துவிடுவதும் தெரிய வந்தது. இதே முறையில் பறிமுதல் செய்யப்பட்ட 6 கிலோ கடத்தல் தங்கம் கடந்த இரு தினங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது எனவும் தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 1.8 கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து, ஹாஜிமுகமது, அங்கமுத்து, லாரன்ஸ் மூவரையும் சுங்கத் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அதிகாரிகள் உடந்தையா?


திருச்சி விமான நிலையத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இதேபோல் கடத்தல் சம்பவத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை மத்திய வருவாய் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் கண்டறிந்தனர். அதையடுத்து 4 அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சுங்கத் துறை இருப்பறையில் பாதுகாக்கப்பட்டிருந்த 30 கிலோ தங்கம் மாயமானது. அதுதொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பொறுப்பு அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், மேலும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இவற்றிலும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com