காலாவதியான மின்னணு பயணச்சீட்டு சாதனங்கள்!

காலாவதியான மின்னணு பயணச்சீட்டு சாதனங்கள்!

அரசுப் பேருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வந்த மின்னணு பயணச்சீட்டு வழங்கும் சாதனங்கள் (எலக்ட்ரானிக் டிக்கெட் மெஷின்) காலாவதியானதால் ஓரங்கட்டப்பட்டு பழையபடி பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசுப் பேருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வந்த மின்னணு பயணச்சீட்டு வழங்கும் சாதனங்கள் (எலக்ட்ரானிக் டிக்கெட் மெஷின்) காலாவதியானதால் ஓரங்கட்டப்பட்டு பழையபடி பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், பயணச்சீட்டுகளை விரைவாக வழங்க முடியாமல் நடத்துநர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சுமார் 22 ஆயிரம் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான பேருந்துகளில் 2010-11ஆம் ஆண்டு முதல் மின்னணு பயணச்சீட்டு சாதனங்கள் வாயிலாக பயணச்சீட்டுகள் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது.

சென்னை, திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் முதலில் இந்த மின்ணணு பயணச்சீட்டு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டு, புறநகர் பேருந்துகளிலும் மின்னணு டிக்கெட் வழங்கும் சாதனம் பயன்பாட்டுக்கு வந்தது.

விழுப்புரம் கோட்டத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் இயக்கப்பட்டு வரும் 3,500 புறநகர் பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் சாதனம் பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டது. கையடக்கமாக உள்ள இந்த சாதனத்தில், கட்டண விகிதங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இதன்மூலம் பயணச்சீட்டுகளை வழங்குவது எளிதாக இருந்தது. மேலும், பயணச்சீட்டு விற்பனை விவரங்களையும் உடனடியாக பார்த்துக் கொள்ளும் வசதியும் இருந்ததால், நடத்துநர்கள் மத்தியில் இந்த முறை வரவேற்பை பெற்றது.

பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் நடத்துநர்கள் தங்கள் பணிகளை விரைவாக முடிக்க இந்த சாதனம் அவர்களுக்கு பெருந்துணையாக இருந்தது. ஆய்வாளர்களுக்கும் பேருந்துகளில் ஆய்வு நடத்தவும் எளிமையாக இருந்தது.

காலாவதியான மின்னணு சாதனங்கள்: பெங்களூரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தப்புள்ளி மூலம் வாங்கப்பட்ட இந்த பயணச்சீட்டு வழங்கும் சாதனங்கள் தற்போது பழுதடைந்து காலாவதியாகி விட்டன. மாநிலம் முழுவதும் மொத்தம் 30 சதவீத சாதனங்கள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன.

இதுகுறித்து நடத்துநர்கள் கூறியதாவது: நகர் பேருந்துகளில் ரூ.2, ரூ.3, ரூ.4 போன்ற குறைந்த கட்டணங்கள் இருந்ததால், அதில் மட்டும் பயணச்சீட்டு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து புறநகர் பேருந்துகளிலும் மின்னணு சாதனங்களே பயன்படுத்தப்பட்டன.

இதனால், வேகமாக பயணச்சீட்டு வழங்கவும், ஒவ்வொரு நிறுத்தம்தோறும் பயணச்சீட்டு விற்பனை நிலவரத்தை தெரிந்து கொள்வதுடன், விரைந்து கணக்குகளை முடிக்கவும் பயனுள்ளதாக இருந்தது. 7 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய அந்த மின்னணு சாதனங்கள் பழுதாகி காலாவதியாகி வருகின்றன. சுமார் 70 சதவீத பேருந்துகளில் மின்னணு சாதனப் பயன்பாடு நிறுத்தப்பட்டு, மீண்டும் பழைய முறையில் பயணச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன. நீண்ட தொலைவு செல்லும் பேருந்துகளில் மட்டுமே மின்னணு சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன.

பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பிறகு பெரும்பாலான பேருந்துகளில் பழைய முறையிலேயே பயணச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

தரமில்லை: நடத்துநர்களுக்கு பயனளிக்கும் வகையிலான இந்த சாதனங்கள் மொத்த கொள்முதல் என்ற பெயரில் குறைந்த விலைக்கு தரமற்றவற்றை வாங்கியதாலேயே அவை விரைவில் பழுதடைந்து காலாவதியாகிவிட்டன. இனி வாங்கும் சாதனங்களையாவது தரமானதாக வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.

இதுகுறித்து விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயன்படுத்தப்பட்ட பயணச்சீட்டு வழங்கும் மின்னணு சாதனங்கள் அதிக பயன்பாடு காரணமாக பழுதடைந்து விட்டன. அவற்றை சீரமைத்து நீண்ட தொலைவு செல்லும் பேருந்துகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய மின்னணு சாதனங்கள் வாங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையால் புதிய சாதனங்கள் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் நிதிநிலை சீராகும் நிலை உருவாகியுள்ளது. எனவே, ஒப்பந்தம் விடப்பட்டு மின்னணு சாதனங்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின்னர், அனைத்துப் பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் முறை மீண்டும் அமல்படுத்தப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com