பாழடைந்த நிலையில் குற்றாலம் அருங்காட்சியகம்

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியகம் போதிய பராமரிப்பின்றியும், அழியும் நிலையிலும் உள்ளது.
பாழடைந்த நிலையில் குற்றாலம் அருங்காட்சியகம்

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அருங்காட்சியகம் போதிய பராமரிப்பின்றியும், அழியும் நிலையிலும் உள்ளது.

பண்பாட்டுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்கள் கொண்ட பழைமையான நகரம் குற்றாலம். கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் பழைய குற்றாலம் அழுதகண்ணி ஆற்றங்கரையில் காணப்படுகின்றன. அழுதகண்ணி ஆற்றில் நுண்கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை குற்றாலத்தில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாக உள்ளன.

பழைய குற்றாலம், தென்காசி அருகேயுள்ள ஆயிரப்பேரி ஆகிய இடங்களில் பெருங்கற்காலப் பண்பாட்டுத் தடயமான முதுமக்கள்தாழிகள், கருப்பு, சிவப்பு கலயங்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து குற்றாலம் பகுதியில் பெருங்கற்கால மக்கள் வாழ்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றாலம் பேருந்து நிலையத்திலிருந்து பேரருவிக்கு செல்லும் சாலையில் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சொக்கம்பட்டி சத்திரம் என்ற கட்டடத்தில் தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. தமிழகத்தின் கலாசாரப் பழமையையும், கலைச் சிற்ப பழைமையையும், எழுத்து வடிவங்களின் பழைமையையும் எடுத்துக்காட்டும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், நுண்கற்கால கருவிகள், கருப்பு, சிவப்பு வண்ணக் கலயங்கள், கிண்ணங்கள், சுடுமண் பொம்மைகள், சுதைச் சிற்பங்கள், கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன களிமண்ணாலான பெண் உருவம், சொரிமுத்து அய்யனார் கோயிலிலிருந்து சேகரிக்கப்பட்ட கால் சிலம்புகள், கைக்கடகங்கள், 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்புப் பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், மரச்சிற்பங்கள், பழங்குடி மக்கள் பயன்படுத்திய மூங்கில் பொருள்கள், ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய பீரங்கிக் குண்டுகள், பூலித்தேவன் பயன்படுத்திய கவண் கற்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, அருங்காட்சியகத்தினுள் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமால் சிலை, 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செங்கல், மகரதோரணர் விநாயகர், பிராம்மி சிலை மற்றும் பழைமையான லட்சுமிநாராயணர், சமணர் உள்ளிட்ட சிலைகளும், கி.மு. 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண்ணால் செய்யப்பட்ட முதுமக்கள் தாழி உள்ளிட்டவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மதுரைக்கு அடுத்ததாக, தென்மாவட்டங்களில் தொல்லியல் துறை அருங்காட்சியகம் குற்றாலத்தில் மட்டுமே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அருங்காட்சியகம் இங்கு செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்து செல்லும் நிலையில், இந்த அருங்காட்சியகத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை விழாக் காலங்களில்கூட மாதத்திற்கு சிலநூறுபேர் மட்டுமே. கடந்த மாதத்தில் பார்வையிட வந்தவர்களின் எண்ணிக்கை நூறைக்கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் வாகனங்களில் எளிதாக வந்துசெல்லக்கூடிய இடத்தில் இந்த அருங்காட்சியகம் இல்லை என்பது இதற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. அதேபோல, அருங்காட்சியகம் முன் வாகனங்களை நிறுத்துவதற்கான எந்த வசதியும் இல்லை.

அருங்காட்சியகத்தின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்து செடிகள் வளர்ந்து விரிசல் விழுந்து காணப்படுகிறது. இதனால், மிதமான மழை பெய்தால்கூட, அருங்காட்சியகத்தின் உள்ளே மழைநீர் கசிகிறது. 400 ஆண்டுகால பழைமையான கட்டடம் என்பதால், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குரியதாக உள்ளது.

திருமால் சிலை, விநாயகர் சிலை உள்ளிட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறையில், சுற்றுலாப் பயணிகள் உள்ளே செல்ல முடியாதவாறு கதவு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கதவுக்கு பூட்டு கிடையாது. கதவு கீழே விழுந்துவிடாமல் இருப்பதற்காக கம்புகளைக் கொண்டு முட்டுக்கொடுத்து பூட்டி வைத்துள்ளனர். பொருள்கள் வைப்பு அறைக்கு கதவு இல்லாமல் திறந்தே கிடக்கிறது.

அருங்காட்சியகத்திற்குள் மழைநீர் கசியும்போது செப்பேடுகள், ஓலைச் சுவடிகள் உள்ளிட்ட முக்கியப் பொருள்களை பாதுகாத்து வைப்பதற்கு அங்குள்ள பணியாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மின்சாரம் தடைப்பட்டால், உள்ளே ஒரே இருட்டாக இருப்பதால் எதையும் காணமுடியாத நிலை உள்ளது. இங்கு கழிப்பறை வசதியும் இல்லை.

சுற்றுலாப் பயணிகள் எளிதில் வந்துசெல்லும் இடத்துக்கு அருங்காட்சியகத்தை மாற்றவேண்டும் என இங்குள்ள பணியாளர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சி செய்தும் அது நடைபெறவில்லை. சன்னதி பஜாருக்கு அருங்காட்சியகத்தை பாதுகாப்பான வகையில் இடம்மாற்றம் செய்தால், அனைத்து தரப்பினரும் எளிதில் வந்துசெல்ல முடியும் என்பதோடு, அதில் உள்ள பழைமையான பொருள்கள் காப்பாற்றப்படும் வாய்ப்பும் ஏற்படும். இதுகுறித்து அரசு உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com