பொலிவு பெறுமா தமிழிசை மூவர் மணிமண்டபம்?

சீர்காழியில் பிறந்து, வாழ்ந்து உலகெங்கும் தமிழிசையை வளர்த்த ஆதி தமிழிசை மூவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் போதிய பராமரிப்பின்றி, பொலிவிழந்து,
பொலிவு பெறுமா தமிழிசை மூவர் மணிமண்டபம்?

சீர்காழியில் பிறந்து, வாழ்ந்து உலகெங்கும் தமிழிசையை வளர்த்த ஆதி தமிழிசை மூவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் போதிய பராமரிப்பின்றி, பொலிவிழந்து, களையிழந்து காணப்படுவது தமிழ்ஆர்வலர்களை வருத்தமடைய செய்கிறது.

சீர்காழியில் பிறந்து, வாழ்ந்து உலகெங்கும் தமிழிசையை பரப்பியவர்கள் ஆதி தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாபிள்ளை. தமிழுக்கு தமது இசை மூலம் பல்வேறு தொண்டுகள் செய்து தொன்மை தமிழ்மொழியின் சிறப்பை உலக மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை தமிழிசை மூவர்களையே சாரும். 

முத்துதாண்டவர்: சங்கீத மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் திருவாரூர் தியாகராஜர், சியாமாசாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகியோருக்கும் முற்பட்டவர்கள் தமிழிசை மூவர்கள். 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துதாண்டவர் இன்பத் தமிழில் இசைப்பாடல்களை இயற்றிய முதல்வராவார். இலக்கிய நயம், இசை, இனிமை பக்திச் சுவை மிகுந்த ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். 

மாரிமுத்தாப்பிள்ளை: சிதம்பரத்தின் வடகிழக்கே தில்லைவிடங்கன் பகுதியில் பிறந்தவர். இவரும் கிபி.17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இளம் வயதிலேயே இசைப் பாடல்களை இயற்றும் புலமை பெற்றவர். இவர் பாடிய கீர்த்தனைகள் சில நூறு மட்டுமே கிடைத்துள்ளன. 

அருணாச்சல கவிராயர்: அருணாச்சல கவிராயர் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடியில் பிறந்தவர். கி.பி 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், உலக மொழிகளில் ஒப்பற்ற தமிழில் நான்வகை புலமையிலும் சிறந்து விளங்கினார். இவ்வாறு சீர்காழியில் வாழ்ந்து தமது இசை மூலம் தமிழ்மொழியின் சிறப்பை உலகறியச் செய்துள்ள தமிழிசை மூவர்களின் சிறப்பைப் போற்றும் வகையில் சீர்காழி மையப் பகுதியில் தமிழக அரசு சார்பில் ரூ.1.51கோடி செலவில் (மணிமண்டபம் ரூ.1கோடி மற்றும் மூவரின் வெண்கலச் சிலைகள் ரூ.51லட்சம் ஆகும்) மணிமண்டபம் கட்டப்பட்டது.இந்த மணிமண்டபத்தில் பண்ணும், பரதமும் விரலியார் சிற்பங்கள், கல் யானை சிற்பங்கள், புறாக்கள் வசிப்பதற்கு ஏற்ப மாடக் கோபுரங்கள் என்று கலைநயத்துடன் அமைக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்து நீண்ட இழுபறிக்குப் பிறகு கடந்த 2013-ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவினால் காணொலிகாட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர், அங்கு தமிழிசை மூவர் விழாக்கள் இரு முறை நடத்தப்பட்டன.

அத்துடன் மணிமண்டபம் கவனிப்பாரற்று உள்ளது. 2013-ஆம் ஆண்டு புதிதாக கட்டடம் கட்டியபோது வெள்ளையடிக்கப்பட்டது (பெயிண்டிங்). அதைத் தொடர்ந்து, வண்ணம் பூசாதததால் (பெயின்டிங்) சுவர்கள் சாலையில் உள்ள மண், புழுதிகள் ஒட்டி பொலிவிழந்து காணப்படுகிறது. தமிழிசை மூவரின் வெண்கலச் சிலைகள் அதன் பளபளப்பு தன்மையும் இழந்து காணப்படுகிறது. 

மேலும், மணிமண்டபத்தில் உள்ள பளிங்கு தரை தளங்கள் ஆங்காங்கே உடைந்துள்ளது. விழாவுக்கு வரும் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக மணிமண்டபத்தின் மேலே ஏறிச் செல்லும் வகையில் உள்ள சாய்வு தளம் தரை ஓடுகள் பெயர்ந்து பள்ளமாக உள்ளது. மண்டபத்தின் உள்ளே ஒட்டடைகள் ஏற்பட்டு களையிழந்து காணப்படுகிறது. வெளி வளாகத்தில் ஆங்காங்கே செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இவ்வாறு உலகெங்கும் தமிழிசையின் பெருமையைப் பறைசாற்றிய மூவரின் மணிமண்டபம் தற்போது கவனிப்பாரற்று காணப்படுவதால் தமிழ் ஆர்வலர்கள் மனவேதனையடைந்துள்ளனர். 

தமிழிசை மூவர் மணிமண்டபத்தை பொலிவுப்படுத்த தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி புதுமைப்படுத்தும் வகையில், வண்ணம் பூசுவதுடன், சிற்பங்களுக்கு ரசாயனப்பூச்சு செய்து மிளிர வைக்க வேண்டும். கழிப்பறை வசதி அவசியம் ஏற்படுத்த வேண்டும். மூவர் விழாவுக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இவ்வாறு மணிமண்டபத்தை மீண்டும் புதுப்பித்து அவற்றை கலை நயத்துடன் பராமரிக்கும் வகையில் அவ்வபோது தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் அரசு விழாக்கள், கலாசார விழாக்கள், அரசு போட்டித் தேர்வுக்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆகியவை நடைபெற அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சாலையில் செல்லும் பொதுமக்கள் நாள்தோறும் மணிமண்டபத்திற்கு வந்து தமிழிசை மூவரின் பெருமை மற்றும் சிறப்புகளை அறிந்து செல்வார்கள். 

இதுகுறித்து, திருக்குறள் பண்பாட்டு பேரவைச் செயலர் கு. ராஜாராமன் கூறியது: தமிழிசையின் பெருமைகளை இசைத் தமிழ் மூலம் உலகறியச் செய்த தமிழிசை மூவரின் சிறப்புகளைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட இம்மணிமண்டபம் பராமரிப்பின்றி பொலிவிழந்துள்ளது வேதனையளிக்கிறது. தமிழக அரசு இந்த மணிமண்டபத்தை புதுப்பித்து அரசு மற்றும் கலை, கலாசார விழாக்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தமிழிசை மூவர் மணிமண்டபம் முன் இருசக்கர வாகனங்கள், காய்கனிகள், மேசை, டேபிள்கள், நர்சரி கார்டன்கள் என வியாபாரத் தலமாக மாற்றப்பட்டுள்ளது. மணிமண்டபத்தை மறைக்கும் வகையில் வியாபாரப் பொருள்கள் முகப்பில் வைத்துள்ளதால் வெளியூரிலிருந்து வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு மணிமண்டபம் இருக்கும் இடம் தெரிவதில்லை. தவிர, வியாபாரிகள் தங்களது விற்பனை முடிந்தவுடன் தேவையற்ற பொருள்களை அங்கேயே வீசிவிட்டுச் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அரசியல் கட்சியினரின் விளம்பர பதாகைகள் மணிமண்டபத்தின் புகழை மழுங்கச் செய்யும் வகையில் வைக்கின்றனர். எனவே, தமிழின் பெருமையை இசை மூலம் உலகறியச் செய்த இசை மகான்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்கள் மட்டுமன்றி அனைவரின் எதிர்பார்ப்பாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com