செயல்படாத அரசு என்பதாலேயே போக்குவரத்து சீர்திருத்த பரிந்துரைகள்: முதல்வரைச் சந்தித்த பின்னர் ஸ்டாலின்

இந்த அரசு செயல்படாத அரசு என்பதாலேயே எதிர்க்கட்சி சார்பாக போக்குவரத்துத் துறை சீர்திருத்தங்கள் பற்றிய  பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வரைச் சந்தித்த பின்னர் ஸ்டாலின்.. 
செயல்படாத அரசு என்பதாலேயே போக்குவரத்து சீர்திருத்த பரிந்துரைகள்: முதல்வரைச் சந்தித்த பின்னர் ஸ்டாலின்

சென்னை: இந்த அரசு செயல்படாத அரசு என்பதாலேயே எதிர்க்கட்சி சார்பாக போக்குவரத்துத் துறை சீர்திருத்தங்கள் பற்றிய  பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வரைச் சந்தித்த பின்னர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது தொடர்பாகவும் , போக்குவரத்துத் துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் ஆராய, முந்தைய திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சர்களாக இருந்த கே.என்.நேரு, பொன்முடி, திமுக தொழிற்சங்கத் தலைவர் சண்முகம், கிருஷ்ணகிரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த  குழுவினர் தங்களது இரண்டு வார ஆய்வுக்குப் பிறகு 27 அம்சங்கள் அடங்கிய பரிந்துரை அறிக்கை ஒன்றை ஸ்டாலினிடம் அளித்தனர்.  

அந்த அறிக்கையை  திமுக செயல்தலைவரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் செவ்வாயன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து ஒப்படைத்தார். அதன்மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த சந்திப்பின் பொழுது துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளார்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது:

எங்களது கட்சியின் சார்பாக அளிக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரை பட்டியலில் 27 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பேருந்து கட்டண உயர்வினை ஒழுங்கு செய்வது தொடர்பாகவும், நிர்வாகச் செலவினங்களை குறைப்பது மற்றும் கடன் சுமை குறைப்பு தொடர்பாகவும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

பேரூந்து கட்டண உயர்வின் மூலம் மக்கள் பாதிக்கப்படக் கூடாது. இதனை ஒரு சேவைத் துறையாக கருதி இதன் நிதிச் சுமை அரசால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். போக்குவரத்து துறைக்கு என தனியாக மத்திய தொகுப்பு நிதியம் அல்லது  நிதித் தொகுப்பு வாரியம் உள்ளிட்டவை உருவாக்கப்பட வேண்டும். இதனை வைத்து புனரமைப்பு பணிகள் செய்யப்பட வேண்டும்.

டீசல் மீது மத்திய அரசு விதிதித்துள்ள கலால் மற்றும் தொகுப்பு வரிகள் நீக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக 10% ஜி.எஸ்.டி வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாதம் ஒருமுறை போக்குவரத்து துறை ஊழியர்களுடன் நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

எங்களது பரிந்துரையினை பெற்றுக் கொண்ட முதல்வர் அது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறினாரே ஒழிய எந்த விதமான உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை. இந்த அரசு செயல்படாத அரசு என்பதாலேயே எதிர்க்கட்சி சார்பாக போக்குவரத்துத் துறை சீர்திருத்தங்கள் பற்றிய  பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மீதும் நடவடிக்கை இல்லை என்றால் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com